
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் 5 சித்தர்களால் கட்டப்பட்டது. இதில் மூவர் சமாதி திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் உள்ளது. மற்றொருவர் சமாதி வள்ளி குகை அருகே உள்ளது. மற்றொருவரின் சமாதி ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ளது.
இதில் ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்றுக்கரையில் உள்ள ஞான தேசிக சுவாமிகளால் தான் திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு செல்பவர்கள் 4 சித்தர்களையும் வழிபட்டுச் செல்கின்றனர். ஐந்தாவதான இந்த ஞான தேசிய சுவாமிகளை வழிபடுவதில்லை.
ஆழ்வார்தோப்பில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள இந்த ஞான தேசிக சுவாமிகள் ஜீவ சமாதி முன்னொரு காலத்தில் மிகவும் சிறப்பாக விளங்கியுள்ளது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முறையாக பராமரிப்பின்றி கோவிலின் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே இந்த ஞான தேசிய சுவாமிகள் ஜீவ சமாதியை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சண்முகசுந்தரம் என்பவர் அவரது ஜீவசமாதி முன்பு சிரசாசனத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆசனத்தில் ஈடுபட்ட இவரது இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.