தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற கூட்டுறவு கொள்கை விளக்க விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற கூட்டுறவு கொள்கை விளக்க விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று (17.07.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி தற்போது 27 கிளைகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மகளிர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கடன் உதவிகள் வழங்கி வருகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படும் அரசு திட்டங்களை வங்கி மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே கூட்டுறவு கொள்கைகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின்மாவட்டத்திலேயே அதிக வட்டி வழங்கும் இட்டு வைப்பு திட்டங்கள், பல்வேறு கடன் திட்டங்கள், குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மத்தியக் கூட்டுறவு வங்கியின் மூலமாக வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேனர்கள், கொள்கை விளக்கக் குறிப்புகள், கடன் திட்டங்கள், வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வங்கிப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், நகை மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 250 நபர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் மற்றும் கடன் திட்டங்கள் மற்றும் கொள்கை விளக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் ஒலிப்பெருக்கி மூலம் கொள்கை விளக்கம் மேற்கொள்ளப்பட்டது.
மத்தியக் கூட்டுறவு வங்கி வழியாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதியுதவி, தமிழ் புதல்வன் நிதியுதவி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், அரசு தள்ளுபடி திட்டங்கள், மத்திய மாநில அரசு மானியங்கள் ஆகிய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுவசதி கடன், வீடு அடமானக் கடன், குறைந்த வட்டியில் தங்க நகைக்கடன், சம்பளக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன், கல்விக் கடன்,
விவசாயிகளுக்கு பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், நாட்டுப்புறக் கலைஞர்கள் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு ஒதுக்கீடு செய்து வீடு கட்டும் கடன், சிறு வணிகர் கடன், சிறு, குறு தொழில்கள் தொடங்கக் கடன், கூட்டுறவு வேளான் இயந்திரமயமாக்கல் கடன், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கடன், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கடன் கடன், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் கடன் ஆகிய கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இப்பேரணியானது மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் தொடங்கி எட்டையபுரம் ரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக குரூஸ் பர்னாந்தீஸ் சிலை தொடர்ந்து பாலவிநாயகர் கோவில் தெரு, அண்ணா சிலை ரவுண்டானா சென்று ராஜ் ஹோட்டல் ரோடு, பக்கில் ஓடை ரோடு, 4ஆம் ரயில்வே கேட் வழியாக வந்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டு ராஜா, பொது மேலாளர் சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் விஜயன், உதவி பொது மேலாளர்கள் சீனிவாசன், பூமிசெல்வி மற்றும் மேலாளர்கள், கள அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


