தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர், தலைமையில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் பேசியதாவது: தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாராம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. 20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1 கோடி பசுவினங்களும், 5 இலட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன.
கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகள் கிராமப்புற ஏழைமகளிருக்கு வழங்குவதின் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய பொருளாதாரத்தை உயர்த்தவும் பெரும்பங்காற்றி வருகிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41% பங்களிப்பை வழங்குகிறது.
தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பபடாமல் இருந்த நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலாலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் அவர்களின் தொடர் முயற்சியாலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று தூத்துக்குடியில் புதிதாக பணியில் சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தப்பட்டது. மேலும், 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழிகள் என மொத்தம் 12,37,764 கால்நடைகள் உள்ளது. இக்கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது குறித்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய துணைவேந்தர் முனைவர்.கோ.சுகுமார், கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் மரு.சீ.ராஜன், மருத்துவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


