
கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள புனித ஓம்கான்வென்ட் பள்ளியில் வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகணேசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சூர்ய பிரம்மன் வரவேற்புரையாற்றினார். இச்சங்கத்தின் செயல்பாடு பற்றி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் விளக்க உரையாற்றினார். இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் முஜிபுர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்ட செயலாளர் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) கௌதமன் நன்றி கூறினார்.
இதில் தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு பணிநெருக்கடி மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சி உருவாகி 8 ஆண்டுகளாகியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தில் மாநகர ஈட்டுப்படி மற்றும் அதற்குரிய வீட்டு வாடகை வழங்கப்படவில்லை.அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைந்து உரிய ஊதியம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.