தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக வல்லநாட்டில் உள்ள மலைப்பிரதேசம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வெளிமான்கள், புள்ளிமான்கள், கடமான் உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.
இந்த நிலையில் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சுகன் கிறிஸ்டோபர் என்பவர் பல்வேறு தகவல்களை தகவல் அறியும் சட்டம் மூலம் வனத்துறையினரிடம் கேட்டிருந்தார்.
அதற்கு வனத்துறையினர் பதில் அளித்துள்ளனர். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடமான், வெளிமான், புள்ளிமான், கீரி, முள்ளம்பன்றி, முயல், பாம்பு, மயில் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடந்த 2015 ம் ஆண்டு வன உயிரினங்கள் கணக்கெடுத்த போது வெளிமான்கள் 145, கடமான் 11, புள்ளிமான் 16 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்தது. தொடர்ந்து அதன் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021&22ம் ஆண்டு வந்த வன உயிரினங்கள் கணக்கெடுப்பின்போது வெளிமான்கள் 255, கடமான் 36, புள்ளிமான் 53 என பல மடங்கு வன உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மேலும் வருடம் தோறும் மரங்கள் உற்பத்தி செய்ய நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் தடுப்பணை, கண்காணிப்பு கோபுரங்கள் சீரமைக்கும் பணிகளும் நடந்துள்ளது.
மேலும் 2015 ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் 2 கோடியை 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 1 கோடியை 9 லட்சம் ரூபாய் இந்தாண்டு வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


