தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 250 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன் முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 250 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கூடுதல் ஆட்சியர்அறிவுறுத்தினார்.
முன்னதாக, கூடுதல் ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற் கடனுதவி, இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 20 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


