
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மணி மண்டபங்களை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் வீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் மணி மண்டபங்களை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது “செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 37 நினைவகங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபம், வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் உள்ளிட்ட மணிமண்டபங்களில் ஒலி – ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கட்டாலங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள விடுதலை போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் உருவப்படத்தினை புதுப்பித்திடவும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நீர் வீழ்ச்சியை பழுதுகள் நீக்கி சீரமைத்து புதிய மோட்டார் பொருத்தி நீர் வீழ்ச்சியை சுற்றிலும் அலங்கார செடிகள் அமைத்து அழகுப்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாற்று சிறப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக புகைப்படங்கள் சேகரித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலி – ஒளி காட்சிகள் அமைத்து சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை குறிப்புகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுத்திட மின்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நினைவு மண்டபத்தில் காலியாக உள்ள மனையில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்படுத்தும் வகையில் அமைத்திட மண்டபம் அமைத்திட ஆலோசனைகள் பொதுப்பணித் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் நினைவு மண்டபத்தில் படிப்பகத்தினை ஆய்வு செய்து அதிகமான புத்தகங்களை வைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள நீர் வீழ்ச்சியை பழுதுகள் நீக்கி சீரமைத்து புதிய மோட்டார் பொருத்தி நீர் வீழ்ச்சியை சுற்றிலும் அலங்கார செடிகள் அமைத்து அழகுப்படுத்திடவும், அங்கு ஒலி – ஒளி காட்சிகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூறும் வகையில் மாவட்ட நிகழ்வுகள் / கதைகள் / நாட்டுப்புற கதைகள்/ நினைவு கூறப்படாத தியாகிகள், கதைகள், நாட்டுப்புற கதைகள் மற்றும் தெரியாத நிகழ்வுகள் இருப்பின் அதுதொடர்பான புகைப்படம் / ஆவணப்படம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை தவறாது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அதன் ஒரு பகுதியாக கயத்தாறு வட்டம் பன்னீர்புரம் ஊராட்சி பகுதியில் 1928ஆம் ஆண்டு கட்டப்பட்ட இரட்டை ஆலமரம் விமானத்தளத்தில் 1969ஆம் ஆண்டுவரை விமான போக்குவரத்து இருந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லை என கோரிக்கைகள் வரப்பெற்றது. அதுதொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கர நாராயணன், கயத்தாறு வட்டாட்சியர் பேச்சிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீர பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, மண்டப பணியாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.