
ஸ்ரீவைகுண்டம் அருகே போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுபடி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னன் குறிச்சி விளக்கு பகுதியில், சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர்களான தளவாய் மகன் சுபாஷ் (20), கருப்பசாமி மகன் தோல்முட்டை முத்துக்குமார் (29), மற்றும் ஆதிச்சநல்லூர் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (எ) போஸ், ஆகிய 3 பேரும் அங்கு வந்த போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சுபாஷ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உட்பட 2 வழக்குகளும், நாசரேத் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என மொத்தம் 3 வழக்குகளும், இசக்கிமுத்து (எ) போஸ் மீது செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், மானூர், தாழையூத்து, திருநெல்வேலி, முத்துப்பேட்டை, திருவாரூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், திருட்டு உடபட 24 வழக்குகள் உள்ளது.ய
தோல்முட்டை முத்துக்குமார் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும், சேரகுளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உட்பட 9 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.