தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கனிமவள கொள்ளை எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி கனிமவள கொள்ளை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ், மூத்த ஊடகவியலாளர் டிஎஸ்எஸ் மணி, தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சேவியர், குளத்தூர் காந்தி ஆகியோர் அளித்த பேட்டியில், வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, கடற்கரை பஞ்சாயத்து அமைத்து மீனவ மக்கள் உள்ளாட்சி பிரதிநித்துவ உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில், திட்டமிடப்பட்டுள்ள கனிம சுரங்க பணி கைவிடப்பட வேண்டும். தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு (தோணி துறைமுகம்) தெற்கு கடற்கரை சாலைக்கு (South beach road) பாண்டியாபதி தேர் மாறன் பெயரிட வேண்டும்.
முயல் தீவில் பாண்டியாபதி நினைவு சின்னம் அமைத்து, விடுதலை போர் வரலாறு போற்றப்பட வேண்டும். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். ஆதவா பவுண்டேஷன் நிறுவனர் பாலகுமாரசனை கைது செய்து, ஆசிரியர் பெருமக்களிடம் ஏமாற்றிய 31 கோடியே மீட்டெடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை அந்த மக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். அந்த மக்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 20 லட்சம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடி மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, மருத்துவமனை போன்ற இடங்களில் தேங்கிய தண்ணீரை உடனே மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.


