ஆறுமுகநேரியில் மளிகைக் கடையில் ரூ.65ஆயிரம் பணத்தைத் திருடிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, லட்சுமி மாநகரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சபரி லிங்கம் (36), இவர் ஆறுமுகநேரி மெயின் ரோட்டில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று இயற்கை உபாதைக்காகச் சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தார். அப்போது கல்லாவில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் பேரில், கடை அருகே நின்று கொண்டிருந்த 4பேரைப் பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரியைச் சேர்ந்த பொன்னுலிங்கம் மகன் சிவராமன் (52), திருச்செந்தூர் வீரராகவ புரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பாக்கிய விநாயகம் (42), கீரனூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சந்தனகுமார் (35), கன்னிராஜ புரத்தைச் சேர்ந்த பாலைய்யா மகன் விஜய் ஆனந்த (56) ஆகிய அவர்கள் 4பேரை போலீசார் கைது செய்து ரூ.65ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.


