ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஆயுதபூஜை அக்டோபர் 1-ம் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால், சிறப்பு ரயில் இயக்கப்படுமா? என்று பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06018/06017) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
நாளை முதல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. சிறப்பு ரயில்கள் அறிவித்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


