தூத்துக்குடியில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.365 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.09.2025) சேலம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.365 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிறப்புரையாற்றியதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்துள்ளார்கள். அதன் ஒருப்பகுதியாக இன்றையதினம் நமது மாவட்டத்தில் மகளிர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குகின்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழு அமைத்தல், பயிற்சிகள் வழங்குதல், மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் பெற்று தருதல், வாழ்வாதார தொழில்களில் ஈடுபட வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியான நபர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துதல் போன்ற பணிகளும் மகளிர் சுய உதவிக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக நகர்புற பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல் பயிற்சி வழங்குதல், நகர்புற வாழ்வாதார மையம் மூலமாக சேவைகள் வழங்குதல் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-2026 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ.1009 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, நாளது தேதி வரை ரூ.387 கோடி எய்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றையதினம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு 909 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி இலக்கீடாக நிர்ணயிக்ககப்பட்டுள்ளது. 706 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.22 கோடி இலக்கீடு எய்தப்பட்டு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.365 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்களோடு துணையாக தான் பெண்கள் இருக்க முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முதன் முதலாக 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார். எங்களுக்காக நாங்கள் நிற்க முடியும், எங்களால் எதையும் செய்யமுடியும் என்று மகளிர்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் பெண்கள் உயர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர்கள் வங்கிகளில் சரியாக பணம் பெற்று, சரியான முறையில் திருப்பி செலுத்துவார்கள் என்ற நிலையில் வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கி வருகிறார்கள். பல்வேறு தொழில்களை என்னென்ன வகையில் செய்ய வேண்டும்? என்ற அடிப்படையில் அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எல்லா வகையிலும் தொழில் செய்கின்ற நிலையினை உருவாக்கி கொண்டிருக்கின்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு வகையில் வளர்ந்திருக்கின்றனர். இன்றைக்கு பெண்கள் படித்து, அதிக அளவில் அதிகாரிகளாக இருப்பதற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தான் காரணம்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக, மகளிர்களாகிய நீங்கள் எல்லா வகையிலும் உயர வேண்டும். எல்லா செயல்களையும் செய்ய வேண்டும். உங்கள் கையிலே உரமாக நிற்க வேண்டும் என்ற நிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நீங்கள் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும், எல்லா தொழில்களும் சிறப்பாக செய்ய வேண்டும். பெண்களுக்கு உதவிகரமாக இருக்கின்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, பெண்களாகிய நீங்கள் தொழில் செய்து வளர வேண்டும். நீங்கள் செய்கின்ற அனைத்து தொழில்களிலும் வெற்றி பெற வேண்டும் எனவும், நீங்கள் எல்லா வகையிலும் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஊரக பகுதிகளை சார்ந்த 430 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.77 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், நகர்புற பகுதிகளை சார்ந்த 276 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.45 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், 87 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.0.51 கோடி மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதி கடனுதவிகளும், 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2 இலட்சம் மதிப்பிலான சுழல் நிதி கடனுதவிகளும், 22 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான வட்டார வணிக வளமையம் கடனுதவிகளும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான Integrated Forming Cluster கடனுதவிகளும், 161 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.34 கோடி மதிப்பில் Enterprise Loan கடனுதவிகளும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 26 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.0.15 கோடி மதிப்பிலான நுண்நிதி தொழில் கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஆர்.ஐஸ்வர்யா, இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி ,உ.நாகராஜன், துணை மேயர் செ.ஜெனிட்டா, உதவி திட்ட அலுவலர் முருகன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


