ழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
‘கரிசல் காட்டு இலக்கியத்தின்” முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் இடைசெவல் கிராமத்தில் 16.09.1922ல் பிறந்தார். பேச்சுத்தமிழில் சாகாவரம் பெற்ற மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்துள்ளார். படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்பும் மிக்க மக்களின் வாழ்வும் சாகாவரம் பெற்றன. இந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின. 1991-ம் ஆண்டு ‘கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்கு “சாகித்ய அகாடமி விருது” பெற்றுள்ளார்.
2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இத்தகைய எழுத்தாளரை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நினைவரங்கம் அமைத்து அவர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, இன்று (16.09.2025) எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அண்ணாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நினைவரங்கத்தை பார்வையிட்டார். பின்னர், கி.ரா நினைவரங்கத்தில் கி.ரா அவர்களின் மகன்கள் ரா.திவாகர் மற்றும் கி.ரா.பிரபாகர் அவர்களுக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கோவில்பட்டி ஹிமான்ஷு மங்கல் கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கி.ராஜநாராயணன் அவர்களின் மகன்கள் ரா.திவாகர், கி.ரா.பிரபாகர் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


