தூத்துக்குடி மாவட்டத்தில் 12 முக்கிய சந்திப்புகளில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி-மதுரை மற்றும் தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய கிராமங்கள் சந்திக்கும் பகுதிகளில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று நீண்ட காலங்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். பல கிராமங்களில் சாலை மறியல் போராட்டங்கள் கூட நடைபெற்றுள்ளது.
கனிமொழி எம்.பியும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பல்வேறு பகுதிகளில் மேம் பாலங்கள் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலைகளில் நடந்த விபத்துக்கள் தொடர்பான விபரங்களை காவல்துறை மூலம் சேகரித்து வந்தது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 12 இடங்களில் ரூ.250 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்பேரில் தற்போது மேம்பாலங்கள் கட்டும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.
அதன்படி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலையங்குளம் சந்திப்பு, வெம்பூர் சந்திப்புகள், மேலகரந்தை சந்திப்பு, தாப்பாத்தி சந்திப்பு, மஞ்ச நாயக்கன்பட்டி சந்திப்பு, எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம், மடத்தூர் பைபாஸ் சந்திப்பு ஆகிய 7 இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவ தற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு. கோரம்பள்ளம் சந்திப்பு, மங்களகிரி விலக்கு, முறப்பநாடு மற்றும் வசவப்பபுரம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மடத்தூர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு 30 மீட்டர் அகலமுள்ள வாகன சுரங்கப்பாதையுடன் பாலம் அமையவுள்ளது.
வெம்பூர்,தாப்பாத்தி, மஞ்சநாயக்கன்பட்டி, மங் களகிரி விலக்கு. முறப்ப நாடு மற்றும் வசவப்பபுரம் ஆகிய இடங்களில் 7 மீட்டர் அகலத்தில் இலகுரக வாகன சுரங்கப்பாதையு டன் மேம்பாலமும், வலையங்குளம், மேலக்கரந்தை, எப்போதும்வென்றான். கோரம்பள்ளம் சந்திப்புகளில் 20 மீட்டர் அகலத்துடன் கூடிய பாலங்கள் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய தேசிய தேசிய சாலை ஆணையத்தின் தூத்துக்குடி பிரிவு திட்ட இயக்குநர் சிவம் ஷர்மா கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சந்திப்புகள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்கள் மற்றும் போக்குவரத்தை எளிதாக் கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. உயர்மட்ட மேம்பால திட்டத்தில் இருபுறமும் சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலைகள் உள்ளன.
இத்திட்டம் டெண் டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பாலங்கள் மற்றும் சர்வீஸ் சாலைகள் கட்டி முடிக்கப்படும். 2ம் கட்டமாக குறுக்குச்சாலை, வாகைக்குளம், எட்டயபுரம், கீழஈரால், துரைசாமிபுரம், சிந்தலக்கரை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான பரிந்துரைகள் பரிசீலனையில் இருப்பதாகவும், 3ம் கட்டமாக தூத்துக்குடி-திருநெல்வேலியில் வல்லநாடு மற்றும் தெய்வசெயல்புரம் ஆகியவை இடங்களில் பாலங்கள் கட்டுவதற்கு பரிசீலிக்கப்படும் என்றார்.


