தூத்துக்குடியில் ‘பெரியசாமி கல்வி அறக்கட்டளை’ சார்பில் இலவச பயிற்சி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பத்திரப் பதிவு அலுவலகத்தின் எதிரே உள்ள வணிக வளாகத்தில் ‘பெரியசாமி கல்வி அறக்கட்டளை’ சார்பில் ஏழை எளிய மக்கள் பயனுறும் வகையில் இலவச கணிணி மற்றும் தையல் பயிற்சி மையத்தை இன்று தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்: மறைந்த எனது தந்தையார் பெயரில் கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, பல்வேறு சமூக பணிகளும், பள்ளி, கல்லூரி சார்ந்த மாணவ-மாணவியர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெண்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் பெற அவர்களுக்கென சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக கனிணி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசு பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக குரூப்-1 தேர்வு பயிற்சி வழங்கும் வகையில் புதியதாக அகாடமி ஆரம்பிக்க உள்ளோம். இந்த பயிற்சி நிலையத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார். விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


