மேலாத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், மேலாத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் இன்று (15.08.2023) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்ததாவது: உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கு உதாரணம் என்றால் மேலாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்தான். பெரும்பாலும் கிராமசபை கூட்டத்தில் அலுவலர்கள்தான் பதில் சொல்வதாக இருக்கும். ஆனால் இங்கு அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லி அவரே முடித்துவிட்டார்.
அந்த அளவுக்கு பல நாளாக அவர் மக்கள் பணியில் இருக்கின்றார். இதுபோன்ற ஊராட்சிமன்ற தலைவர், அவருக்கு உறுதுணையாக இருக்கின்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்கள், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலாத்தூர் பகுதிக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். கொரோனா காலத்தில் இருந்து, ஆகாயத்தாமரை பொருள் தயாரிக்கும் பயிற்சி வரை, இப்போது கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். மேலும், இங்கிருக்கிற பெண்கள் மிகவும் தைரியசாலிகள், புதுமையை விரும்புவர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
இன்று ஆகாயத்தாமரையை தமிழ்நாடே உற்றுப்பார்க்கிறார்கள் என்றால் அதற்கு மேலாத்தூர் பெண்களே காரணம். ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இங்கிருக்கின்ற பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் இருக்கிறார்கள். மேலஆத்தூருக்கு நான் வரும்போது தமிழ்நாட்டிலேயே ஒரு தொன்மையான நாகரிகத்துக்கு வந்திருக்கிறோம் என்று நியாயபகப்படுத்தக்கூடிய ஊர். சிந்துசமவெளி நாகரிகத்தில் உள்ள பெயர்களைப்போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் புத்தகம் எழுதியுள்ளார்கள். தாமிரபரணி ஆறு புன்னக்காயல் பகுதியில் முடிவடைந்தாலும் கொற்கை பகுதியில்தான் பண்டைய காலத்தில் வணிகம் செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் தொன்மையான நாகரிகம் நமது பொருநை நாகரிகம். ஆத்தூர் பகுதியில் உள்ள வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 2 பொருட்களுக்குத்தான் புவிசார் குறியீடு வாங்கியிருக்கிறோம். ஒன்று கோவில்பட்டி கடலை மிட்டாய், மற்றொன்று ஆத்தூர் வெற்றிலை. புவிசார் குறியீடு பெற்றதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு சங்கத்திலும் வெற்றிலை வளர்க்கும் விவசாயிகள் கடன் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உதவிகள் செய்யும். இந்த கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் வர இருக்கின்றது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் காலை சிற்றுண்டி திட்டம் நமது மாவட்டத்தில் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில்தான் தற்போது வழங்கப்படுகிறது. வருகின்ற 25ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆத்தூர் பகுதியில் இருக்கின்ற நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் விவசாயம் செய்ய தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளீர்கள். வடகிழக்கு பருவமழை 60 சதவீதம்தான் நமக்கு கிடைத்தது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. வாழை விவசாயிகளுக்கு தண்ணீர்வசதி செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவோம். அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் பஸ் நிறுத்தம் செய்து தரப்படு;ம். அனைத்து வேலைகளும் ஒவ்வொன்றாக செய்து தரப்படு;ம் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன். அதுபோல சமுதாய நலக்கூடம், பொது சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும். உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் , மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, இணை இயக்குநர் வேளாண்மைத்துறை பழனிவேலாயுதம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் உலகநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜனகர், மேலாத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் ஏ.பி.சதீஷ், துணைத் தலைவர் பக்கீர் முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


