கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவு – எதிரிகள் 4 பேர் உடனடியாக கைது.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரபாண்யடியன் மகன் கனகராஜ் (38) என்பவரை நேற்று (14.08.2021) இரவு அவரது வீட்டின் முன்பு வைத்து மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இதை தடுக்கச் சென்ற கனகராஜின் தாயார் பார்வதி (59) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இடதில் காயமடைந்த பார்வதி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. நாராயணனசாமி, தலைமைக் காவலர்கள் திரு. முருகன், திரு. அமல்ராஜ், திரு. உலகநாதன், முதல் நிலைக் காவலர்கள் திரு. ஆனந்த், திரு.மைதீன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை வைத்து ஆய்வு செய்ததிலும், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதிலும் மேலபாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த 1) பூலோகப்பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (25), கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த 2) மாரியப்பன் மகன் மகேந்திரன் (21), கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த 3) ரத்னவேல் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார் (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 4) முருகேசன் மகன் சிவபெருமாள் (25) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கனகராஜை நேற்று அரிவாளால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது, உடனடியாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி ரோந்து சென்று மேற்படி 4 பேரையும் இன்று கைது செய்து, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த, தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்


