கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் செல்வகுமார் (32) என்பவருக்கும், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரிக்கண்ணன் என்பவருக்கும் கடந்த 12.05.2023 அன்று கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவில் கொடை விழாவில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்படி மாரிக்கண்ணன் அவரது சகோதரரான கோமதி செல்வம் (24) என்பவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கோமதி செல்வம் அவரது உறவினரான திருநெல்வேலி மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் அய்யப்பன் (28) என்பவருடன் சேர்ந்து, நேற்று (15.05.2023) கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த மேற்படி செல்வகுமாரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. விஜயகுமார் வழக்குபதிவு செய்து எதிரிகளான கோமதி செல்வம் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி கோமதி செல்வம் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், எதிரி அய்யப்பன் மீது ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


