சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.26,316 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் பாலவிளையைச் சார்ந்த அனிஷா என்பவர் ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் உடல் நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்காக ரூபாய் 11,316 செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சைக்காக ஏற்கனவே செலவழித்த ரூபாய் 11,316, நஷ்ட ஈடு ரூபாய் 10,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் 26,316 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் உத்திரவிட்டனர்.


