பண்டாரம்பட்டி கிராமத்தில், பழைய கட்டிடம் ஒன்றில் கூடு கட்டியிருந்த விஷக் கடந்தை வண்டுகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக அகற்றினர்.
தூத்துக்குடி மீளவிட்டான் அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகம் அருகிலுள்ள பழைய கட்டிடம் ஒன்றில் விஷக் கடந்தை வண்டுகள் மிகப்பெரிய அளவில் கூடு கட்டியிருந்தன. இந்தக் கடந்தை வண்டுகள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை விரட்டிச் சென்று கடிக்க ஆரம்பித்ததால், அப்பகுதியில் அச்சமான சூழல் நிலவி வந்தது.
தொடர்ந்து பொதுமக்களைத் துன்புறுத்தி வந்த இந்த வண்டுகளை அகற்றக் கோரி, பண்டாரம்பட்டி 1-வது வட்ட திமுக செயலாளர் மற்றும் கிராம மக்கள், சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்தவுடன், சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இக்குழுவில் போக்குவரத்து அலுவலர் லெ.புன்னவனகட்டி, தரம் உயர்த்தப்பட்ட ஏட்டுகள் மகேஷ், ராம்குமார், சக்திவேல் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பழைய தேவையற்ற பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தில் இருந்த விஷக் கடந்தை வண்டுகள் கூட்டினை, தீயணைப்பு வீரர்கள் தீப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பாகவும், முற்றிலுமாகவும் அகற்றினர்.
பல நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த விஷ வண்டுகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி கிராம மக்கள் மிகுந்த நிம்மதி அடைந்தனர். துரிதமாகச் செயல்பட்டு ஆபத்தை நீக்கிய சிப்காட் தீயணைப்பு வீரர்களுக்குக் கிராம மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


