
குறுக்குத்துறை முருகன் கோயில் கோயிலின் தல வரலாறு திருச்செந்தூர் கோயில் வரலாறுடன் இணைந்தது என கூறியிருந்தோம். அதைப்பற்றித்தான் கூறப்போகிறோம். கி.பி 1648 ல் திருச்செந்தூர் முருகன் உற்சவச்சிலை காணாமல் போனது. இந்தச்சிலையை டச்சுகாரர்கள் தூக்கிக் கொண்டு கடலின் வழியே படகில் சென்றனர். திடீரென்று சூறாவளி ஏற்பட்டது. இச்சிலையின் காரணமாகத்தான் இந்த அசாம்பாவிதம் நடக்கிறது என்று உணர்ந்த அவர்கள் சிலையைக் கடலில் தூக்கி வீசினர். அதன் பின் சூறாவளி நின்றது. தப்பித்தோம் பிழைத்தோம் என டச்சுகாரர்கள் ஒடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் தென்பாண்டி நாட்டில் பல கோயில்களை உருவாக்கிய வடமலைப்பிள்ளை என்பவருக்குத் தெரிந்தது. அவர் மனது உடைந்தார். உடனே சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற கருவேலங்குளம் சிற்பிகளிடம் சென்று புதிய முருகன் சிலையைச் செதுக்க ஏற்பாடு செய்தார். இதற்காகத் தாமிரபரணிக் கரையில் நெல்லை குறுக்குத் துறையை தேர்ந் தெடுத்தார். குறுக்குத் துறைக்கு “திருவுருவாமலை” என்று பெயர். சிற்பம் செய்ய வேண்டிய சிறந்த பாறைகள் இங்கிருந்த காரணத் தினால் குறுக்குத்துறை திருவுருவா மலை என்ற பெயர் பெற்றது. இந்த இடத்தில் முருகப்பெருமான் சிலையைச் செதுக்கினர் சிற்பிகள்.
கி.பி 1653 ல் அழகான முருகன் சிலை செதுக்கப்பட்டது. அந்தச் சிலையை மேளதாளம் முழங்க திருச்செந்தூர் நோக்கி மாட்டு வண்டியில் கொண்டு சென்றனர். ஈரடுக்கு மேம்பாலம் அருகில் உள்ள சாலை குமாரசுவாமி கோயில் தற்போது உள்ள இடம் வந்த போது நல்ல மழை பெய்தது. எனவே இந்த இடத்தில் அவர்கள் தங்கி விட்டனர். மறுநாள் காலையிலேயே கிளம்ப முயற்சி செய்தனர். அப்போது மீண்டும் மழை பெய்தது. எனவே அங்கேயே இரண்டாம் நாள் இரவும் தங்கினர்.
தலைமை சிற்பி மனம் நொந்தார். “என்ன செய்வது முருகா” என்று முருகனை வேண்டி நின்றார். பின் அவர் மனதில் தோன்றியது போலவே அவரே முடிவு செய்தார். இந்த இடத்தில் ஒரு விநாயகரை பிரதிட்சை செய்வோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நினைத்தார். மூன்றாம் நாள் விநாயகரை இவ்விடத்தில் பிரதிட்சை செய்து விட்டு வண்டியில் இருந்த முருகப்பெருமானோடு கிளப்ப முயற்சித்தனர். முடியவில்லை. மூன்றாம் நாள் இரவும் அங்கேயே தங்க வேண்டியதானது.
அன்று இரவு தலைமை சிற்பி கனவில் முருகன் தோன்றினார். அவர், “இந்த தாமிரபரணி கரை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. யாம் இங்கேயே தங்க ஆசைப்படுகிறோம்”. என்றார்.
ஆனால் தலைமை சிற்பி பதைபதைத்து போனார். “முருகா இது ஆட்சித்துறை எனக்கு இட்ட கட்டளை. எனவே நான் இங்கேயே உம்மை பிரதிட்சை செய்ய முடியாது. இதை நான் திருச்செந்தூரில் கொண்டு வைத்து விட்டு மீண்டும் இங்கே வருகிறேன். உமக்கும் இதே போல் சிலை ஒன்றை மீண்டும் ஏற்படுத்தி இங்கேயே கோயில் கட்டுகிறேன்” என முருகப் பெருமானிடம் வாக்குறுதி கூறினார். மறுநாள் விடிந்தவுடன் ஊரைக் கூட்டினார். முருகப்பெருமான் தனக்கிட்ட கட்டளையை ஊர் மக்களிடம் கூறினார். ஊர் மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதன்பின் முருகனுக்கு பூஜை செய்தனர். பின் வண்டி முருகப்பெருமானுடன் நகர்ந்தது.
தாமிரபரணி நதியைத் தாண்டி பாளையங்கோட்டை பகுதியினை வண்டி கடந்தது. அப்போது முருகனின் திருவிளை யாடல் திருச்செந்தூரில் அரங்கேறியிருந்தது. அது பற்றிய விவரம் வண்டியில் சென்றவர்கள் காதுக்கு எட்டியது. டச்சுக்காரர்கள் கடலில் போடப்பட்ட முருகன் சிலை வடமலையப்ப பிள்ளை முயற்சியால் கிடைத்தது என்றும் அதைத் திருச்செந்தூர் கோயிலில் வைத்துள்னர். என்றும் இனிமேல் இந்தச் சிலையை திருச்செந்தூர் கொண்டு வரவேண்டாம் என்றும் தகவல் கிடைத்தது. பின் பக்த பெருமக்களுடன் ஆலோசணை நடத்தினார் தலைமை சிற்பி. கொண்டு வந்த சிலையைத் திருப்பி கொண்டுச்செல்ல வேண்டாம். அந்தச் சிலையை இங்கேயே வைப்போம். இது முருகனின் பெரும் திருவிளையாடலாகும். எனவே முருகனிடம் உறுதி கூறியபடியே மற்றொரு சிலையைச் செய்து, அதைச் சாலைக்குமார சுவாமி கோயிலில் வைப்போம் என்று முடிவு செய்தனர். அங்குள்ள சிவன் கோயிலில் வண்டியில் கொண்டு வந்த முருகன் சிலை வைக்கப் பட்டது. திருச்செந்தூருக்குச் செய்த முருகனை சிற்பிகள் பாளையங் கோட்டை அருகேயே வைத்தனர். இந்த இடம் தான் தற்போது முருகன் குறிச்சி என்றழைக்கப்படுகிறது.
அதன் பின் தலைமை சிற்பி , தன்னோடு பணியாற்றியவர்களை அழைத்துக் கொண்டு குறுக்கு துறைக்கு வந்தார். மீண்டும் ஒரு ஆறுமுகநயினார் சிலையை உருவாக்கினர். அதற்கு சிந்துபூந்துறை, வீரராகவபுரம் மற்றும் சுற்று பகுதியில் உள்ள மக்கள் பொருள் தந்து உதவினர். தற்போது சாலைகுமரசாமி கோயில் உள்ள இடத்தில் அந்த சிலை பிரதிட்சை செய்யப்பட்டது. பின் அங்கு கோயில் கட்டப்பட்டது. முதலில் இந்தக் கோயிலைக் குமாரகோயில் என்றழைத்தனர்.
எம்பெருமான் முருகன் இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்துக் கொண்டே இருந்தார். கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் நெல்லை & பாளையங்கோட்டையை இணைக்கும் நீண்ட சாலை இக்கோயில் முன்பாக இருந்ததால் இந்தக் கோயிலை “சாலை குமாரன் கோயில்” என்று மக்கள் கூற ஆரம்பித்தனர். தற்போது ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் முன்பு இந்தச் சாலை தான் பிரதான சாலை. 16 ஆம் நூற்றாண்டுகளில் பாளையக்காரர்களில் காலட்படை, குதிரைப்படை, யானைப்படை இந்தச் சாலை வழியாகச் சென்றதால் இச்சாலை பாளையஞ்சாலை என்றழைக்கப்பட்டு வந்தது. எனவே இந்தச்சாலையில் இருந்த கோயிலும் “பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயில்” என்ற பெயர் பெற்றது.
இதுபோலவே குறுக்குத்துறையில் நடந்த ரகசியங்கள் பல. அதில் சில ரகசியங்களை நாம் காணலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)