
எழுத்தாளர் நாறும்பூநாதன் நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. நெல்லையை சேர்ந்த பிரபலமான எழுத்தாளர். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 1960 இல் பிறந்தவர். இவர் ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது பெயரே வித்தியாசமானது. நாறும்பூ என்பது தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை மாவட்டம் திருப்புடை மருதூரில் உள்ள இறைவன் நாறும்பூநாதரின் பெயர். அந்த பெயரைத்தான் இவரது பெற்றோர்கள் இவருக்கு வைத்துள்ளனர். வித்தியாசமான பெயருடன் வித்தியாசமான இலக்கிய வாதியாகவே வாழ்ந்து வந்தார் நாறும்பூ நாதர்.
நாறும்பூநாதனின் முதல் புத்தகம் “கனவில் உதிர்ந்த பூ” 2002 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சி கல்லூரியில் (2016) முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 10 க்கு மேற்பட்ட நூல்களை எழுதிய இவர் தமிழக அரசின் உ.வே.சா விருது (2022) பெற்றவர். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இலக்கிய கூட்டம், புத்தக கண்காட்சி மற்றும் புத்தகங்களை வெளியிட்டு பெருமை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே இதய நோய் இருந்தது. பைபாஸ் சர்ஜரி செய்து இருந்தார். ஆனாலும் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு ஓய்வறியாது பணியாற்றிகொண்டிருந்தார். நெல்லை 2025 புத்தக கண்காட்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு நாள் மயக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின் பாளையங்கோட்டை சாந்திநகர் 27 வது தெருவில் அவரது இல்லத்தில் ஒய்வெடுத்து வந்தார். இன்று 16.03.2025 அன்று காலை நடைபயிற்சி சென்ற போது மயங்கியுள்ளார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவர் உயிர்பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இவரது உடல் மக்கள் பார்வைக்காக சாந்திநகர் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாறும்பூ நாதருக்கு உஷா என்ற சிவகாமசுந்தரி என்ற மனைவியும். திலக் என்ற மகனும் உள்ளனர். திலக் கனடாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தந்தை இறந்த தகவலை கேட்டவுடன் அவர் மனைவியுடன் விமானத்தில் தயாகம் வருகிறார். மகன் வருகைக்கு பின் இவரது நல்லடக்கம் செவ்வாய் கிழமை (18.-03.2025) அன்று நடைபெறும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட கடைசி இரண்டு வருடத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கரிசல் இலக்கியங்களை தொகுத்தது, தென்காசி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நூல் வெளியிட்டது. நெல்லை மாவட்டத்தில் நூற்றாண்டு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என தனித்தனி நூலாக தொகுத்தது என இலக்கிய வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்தார் நாறும்பூ நாதர். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய பொதுக்குழு உறுப்பினர். எனது சிஷ்யன் காமராசு செல்வன் எழுதிய “மழை எனும் மாரி வெள்ளம்” என்ற நூலுக்கு அணிந்துரை கேட்டோம். அதையும் இன்முகத்துடன் தந்தார். கடந்த ஞாயிற்றுகிழமை பாப்பாக்குடியார் நூல் வெளியிட்டு விழாவுக்கு வருகை தர இலயவில்லை என அவரது வாழ்த்து செய்தியை ஆடியோவிலேயே கூறியிருந்தார். அதை பாப்பாக்குடியார் ஒலிபரப்பிய போது, இதோ விரைவில் நாறும் பூ நாதர் நலம் பெற்று வருவார் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது நிறைவேறவில்லை. தனது இ றுதி மூச்சி வரை தமிழ் இலக்கியத்துக்காவே வாழ்ந்து மறைந்துவிட்டார்.
சிறந்த எழுத்தாளர், மற்றும் இலக்கிய ஆர்வலர், தென்னகத்தில் ஆவண காப்பாளர் ஒருவரை இழந்து தவிக்கிறது, தமிழகம். அவரை இழந்து வாடும் மகன், மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் -முத்தாலங்குறிச்சி காமராசு