முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில் காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவர் கோவிலில் உள்ள 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்துள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஓம்குமாருக்கு ஏற்கனவே ரத்த அழுத்த நோய் இருந்து வந்துள்ளது. அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இறந்த ஓம்குமாருக்கு மலர்விழி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உடன் வந்த ஓம்குமார் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழும் காட்சிகள் அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.


