தூத்துக்குடியில் காயத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு, கடற்கரையில் புதைக்கப்பட்டது. தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் பசு ஒன்று இறந்த நிலையில் நள்ளிரவு கரை ஒதுங்கியது. கடற்கரைக்கு இன்று காலையில் வந்திருந்த பொதுமக்கள் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா வனச்சரக அலுவலர் ஜினோ பிளசில் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த அரியவகை கடல் பசு, சுமார் 7 அடி நீளமும் 80 முதல் 100 கிலோ எடை கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்தது. மேலும், 4 முதல் 5 வயது வரை இந்த கடற் பசுவுக்கு இருக்கலாம் என தெரியவந்தது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து கடற்பசு கடற்கரையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது.


