உணவில் உள்ள கலப்படத்தை எளிய முறையில் கண்டறிதல் குறித்து நாகலாபுரம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகாவிற்கு உட்பட்ட நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருத்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) சார்பாக வீட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவில் உள்ள கலப்படத்தை எளிய முறையில் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, முதுகலை இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகச்சாமி, என்.எஸ்.எஸ். திட்டம் பொறுப்பு முதுகலை வேதியல் ஆசிரியர் கெளதமன், நிர்வாக முதுகலை உயிரியல் ஆசிரியை மகேஸ்வரி மற்றும் விளாத்திகுளம்-புதூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்கல்வி வேளாண் அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி மாரியப்பன் பேசியதாவது: முதலில் பள்ளி மேல் நிலைக் கல்வி மாணவ-மாணவியர்களின் மிகவும் பிடித்தமான உணவு பழக்க வழக்கங்களை கேள்விகளாக தொகுத்து அதன் நன்மை மற்றும் தீமைகளை பட்டியல் இட்டு விழிப்புணர்வு செய்து தொடர்ந்து அச்சு வெல்லம், ஜவ்வரிசி, மல்லி, பேரிச்சம்பழம் ஆகிய உணவு பொருளின் இயற்கை தன்மை, அதே பொருள் பிளீச்சிங் செய்யப்பட்டால் ஏற்படும் மாற்றத்தின் தோற்றம் மற்றும் அப்பளம்-செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட அப்பளம், மிளகு-தாது எண்ணெய் தடவிய மிளகு, தேயிலைதூள்-கலப்பட தேயிலை தூள், தேன்-கலப்பட தேன், நெய்-தப்பு குறியிடப்பட்ட நெய், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட மிட்டாய் மற்றும் சிப்ஸ், மசாலாகடலை ஆகியவைகளின் நேரடி செயல் விளக்கம் அளித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து விழிப்புணர்வு செய்திகளை பகிர்ந்து விளக்கம் அளித்தார். அதாவது நாம் அனைத்து மூல உணவுப் பொருட்களுக்கும் வியாபாரிகளையே சார்ந்திருக்கின்றோம். அத்தகைய உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை தயாரிப்பதையும், விற்பனை செய்வதையும் கண்காணித்து, தவறு நடக்கும் இடங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் தான் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ஆனது 05.08.2011 முதல் முழுவீச்சில் நம்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
இச் சட்டத்தின் அடிப்படையான விதி யாதெனில், உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் (விவசாயிகள் தவிர), விற்பனையாளர்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைவரும், மேற்கூறிய சட்டத்தின் கீழ் “உணவு பாதுகாப்பு உரிமம்” பெற வேண்டியது மிகவும் அவசியம். உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவர்கள் இத்துறையின் நேரடி கண்காணிப்பிற்கு உட்பட்டவராகின்றார்கள். அதனால், பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது. ஆகவே, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற வணிகர்களிடம் மட்டுமே உணவுப் பொருள் வாங்குவது சிறந்தது.
.நாம் இன்றிலிருந்து, மிட்டாய், மீன், காய்கறி, இறைச்சி, பால் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களை வாங்குவதில் ஆரம்பித்து, உணவருந்தச் செல்லும் உணவகங்கள் வரை, 14 இலக்க FSSAI உரிமத்தின் நகல் சம்பந்தப்பட்ட கடையில் தொங்க விடப்பட்டுள்ளதா அல்லது சில்லறை/நடமாடும் வியாபாரிகள் வைத்துள்ளனரா என்பதை கவனித்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். அல்லது உணவருந்த வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் இல்லை அல்லது பாதுகாப்பற்ற உணவு அல்லது கலப்படமான உணவு குறித்து புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலக எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும் .தொடர்ந்து பேக்கரிக்கோ அல்லது இனிப்பகத்திற்கோ (sweet stall) சென்று இனிப்புகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் வாங்கும் பழக்கம் நம்மிடையை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. அவ்விடங்களில் சில லேபிள் விபரங்களை உணவு வணிகர்கள் செய்துள்ளார்களா? என்பதை நுகர்வோர்களாகிய நாம் அனைவரும் கவனிக்க வேண்டும். அதாவது பலகாரம் எந்த எண்ணெயில் செய்யப்பட்டது என்ற விபரம், பலகாரம் எந்த நெய்யில் செய்யப்பட்டது என்ற விபரம், விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலகாரங்களின் முன்பு ஒரு சிறிய அட்டை/ப்ளாஸ்டிக் போர்டில் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம்,ஸ்வீட்ஸ், காரம் மற்றும் பேக்கரி வகைகளை எடை போட்டு பொட்டலமிடப்படும் போது, அப்பொட்டலத்தில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை அழியாத மையில் எழுத வேண்டியது மிகவும் அவசியம்,
நியூஸ் பேப்பர் உள்ளிட்ட எந்தவித அச்சிட்ட காகிதங்களிலும் உணவுப் பொருள் நேரடியாகப்படுமாறு பொட்டலமிடக் கூடாது என்ற பார்வையும், அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பைகளை உணவுப் பொருட்களைப் பொட்டலமிடப் பயன்படுத்தக்கூடாது என்ற விபரம் அதிலும் குறிப்பாக, சாம்பார், ரசம், டீ, காஃபி உள்ளிட்ட எந்த வகை சூடான பொருட்களையும் ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிட்டு வாங்கக்கூடாது. செக்கு எண்ணெய் என்று கூவிக்கொண்டு வியாபாரி ஒருவர் உங்கள் வீட்டிற்கே வந்து, உங்களிடம், மிகவும் குறிப்பாக இல்லத்தரசிகளிடம் நயமாக பேசி, மேற்படி எண்ணெயை விற்றுவிட்டுச் சென்றுவிடுவார்.
ஆனால், நீங்கள் வாங்கியது, உண்மையில் செக்கு எண்ணெய் தானா அல்லது கலப்படமில்லாத தரமான எண்ணெய் தானா என்பதிற்கு உத்திரவாதம் இல்லை. ஏனென்றால், நமது மாநிலத்தில் சில இடங்களில் அந்த வகையான மோசடியைக் கண்டறிந்து, உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்பதுடன், அத்தகைய குற்றம் நடக்காவண்ணம் தொடர் கண்காணிப்பினையும் மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதால், எண்ணெயை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்தும், எண்ணெயை எப்படி பாதுகாப்பாக இருப்பு வைப்பது குறித்து தொடர்ந்து கூறிய போது பானையின்/டின்னின் மூலம் சில்லறை விற்பனை (loose oil sale) அடிப்படையில், நடமாடும் வியாபாரிகளால் விற்கப்படும் எண்ணெயை வாங்கக்கூடாது.
லேபிள் இல்லாமல் பாட்டிலில் அடைத்து, செக்கு எண்ணெய் என்ற பெயரில் விற்கப்படும் எண்ணெயையும் வாங்கக்கூடாது. FSSAI உரிமம் உள்ளிட்ட முழு லேபிள் விபரங்களுடன், பாட்டிலில் அடைத்து, விற்கப்படும், எந்த உணவு எண்ணெயாக இருந்தாலும், அதனை வாங்கிப் பயன்படுத்தலாம். செக்கு எண்ணெய் பாட்டிலாக/பொட்டலமாக இருந்தாலும், லேபிள் அவசியம் பார்க்க வேண்டும் .சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், திறந்தநிலையிலும், அடுப்பின் அருகிலும் உணவு எண்ணெயை இருப்பு வைக்கக்கூடாது . சிலிண்டர் போன்று எளிதில் தீ பிடிக்கும் உபகரணங்கள் அருகில் எண்ணெயை வைக்கக்கூடாது.
அவசரகதியில் உணவு எண்ணெய் என்று நினைத்து, திரவ வேதிப் பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்திய நிகழ்வுகள் பதிவாகியுள்ளது என்பதால், வேதிப்பொருட்களின் அருகே, மிகவும் குறிப்பாக, திரவ நிலை வேதிப்பொருட்களின் அருகே உணவு எண்ணெயை இருப்பு வைக்கக்கூடாது என்ற எச்சரிக்கை செய்தியுடன் தொடர்ந்து செலவைக் குறைப்பாதாகக் கருதியும், உணவுப் பொருட்களை வீண்டிக்கக்கூடாது என்று கருதியும், நம்மில் சில வீடுகளில் எண்ணெய் தீய்ந்து கருப்பாக மாறும் வரை பயன்படுத்துவோம்.
ஆனால், உணவு எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் போது வரும் நோய்களைவிட, எண்ணெயைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்துவதால் தான் நோய்தாக்கம் அதிகரிக்கின்றது என்பதை நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும் எனவே,உணவு எண்ணெயை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரே வகை உணவு எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 4 தேக்கரண்டிகளுக்கு மிகாமல் உணவு எண்ணெயை எடுத்துக்கொள்ளலாம்.
ஒருமுறை பயன்படுத்தி மீதமான எண்ணெயை, அதிகபட்சம் இரண்டு முறைக்கு மேல் திரும்ப சூடுபடுத்தி் பயன்படுத்தக்கூடாது என்றிருந்தாலும், “எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்துவதான் உடல் நலத்திற்குச் சிறந்தது”பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால், எண்ணெயில் “Total Polar Compounds” என்ற கெட்ட கொழுப்புகள் அதிகரித்து, இரத்தநாளத்தில் கொழுப்பு படிமம் ஏற்பட்டு, அத்திரோஸ் கிலிரோஸிஸ், இதய நோய், இரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உருவாகும் என்பதையும் அதிக வெப்ப நிலையில் மீண்டும் மீண்டும் உணவு எண்ணெயை சூடுபடுத்திடும் போது, “அக்ரிலமைடு” என்ற புற்றுநோய் காரணி உருவாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, பொறிப்பதற்காக உணவு எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது அதன் மிக சிறந்தது. உண்மை ஒரு அடி செல்லும் முன் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும் என்று சொல்வார்கள். அதை நிரூபிப்பது போல், “இப்போது வருவதெல்லாம் உணவு எண்ணெயே கிடையாது. அதெல்லாம் பெட்ரோலியம் பொருட்களின் சுத்திகரிப்பின் போது கிடைக்கும் மினரல் ஆயில்” என்ற பரப்புரையை நாம் அடிக்கடி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் படித்து, உணர்ச்சிவசப்பட்டுள்ளோம். ஆனால், இம்மாதிரியான பரப்புரைகளை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், FSSAI உணவு எண்ணெயில் சிறப்பு கள ஆராய்ச்சி ஒன்றை 2020-ல் நடத்தியது.
அதனடிப்படையில், எண்ணெயில் எம்மாதிரியான கலப்படங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும், சட்ட அம்சங்கள் குறித்த விளக்கத்தில் கலப்படத்தினை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நுகர்வோரை ஏமாற்றுவதற்கு மட்டும், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்காத விலை மலிவான உணவுப் பொருளைக் கொண்டு (substance not injurious to health), அதே வடிவிலான விலை உயர்வான உணவுப் பொருளுடன் கலப்பது ஒரு வகை. (உ.ம்: கடலை எண்ணெயில் பாமாயில் கலப்படம்.) உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், விலை மலிவான உணவற்ற பொருளை, உணவுப் பொருளுடன் கலப்பது மற்றொரு வகை. (உ.ம்: உணவு எண்ணெய்களில் அர்ஜிமோன் ஆயில் கலப்படம்)
நமது மாநிலத்தினைப் பொறுத்த வரை, உணவு எண்ணெயில் அதிகமாக கலப்படம் செய்யப்படுவது பாமாயிலின் வகைகள் (Palmolien, Olien etc.,) ஆகும். ஆனால் அதேவேளையில், நுகர்வோருக்கு ஏற்ற விலையில், கொழுப்புச் சத்து சீராகக் கிடைக்க வேண்டும் என்பதிற்காக, FSSAI-னால் அனுமதிக்கப்பட்டு, அக்மார்க் சான்றுடன் உரிய லேபிள் விபரங்களுடன் வரும் கூட்டுத் தாவர எண்ணெய் (Muti-Sourced Edible Oil) ஆனது கலப்படம் என்ற வரையறையில் வராது .
பாமாயில் விலை குறைவானதால், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுடன் (Refined Palmolien or Olien), சிறிதளவு கடலை எண்ணெய்/நல்லெண்ணெய் கலந்து, கடலை எண்ணெய்/ நல்லெண்ணெய் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிவிடும் வாய்ப்புள்ளது. எனவேதான், அரசு உணவு எண்ணெயை லேபிளின்றி சில்லறை விற்பனையில் விற்க தடை செய்துள்ளது. அதுபோல், மற்றொரு மலிவு விலை எண்ணெயான, நாய்கடுகு எண்ணெய் (Argimone Oil) என்ற எண்ணெயை உணவு எண்ணெயுடன் கலக்க வாய்ப்புள்ளது. எனவேதான், இந்த எண்ணெயின் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து உணவு எண்ணெயின் பொட்டலங்களிலும், “Free from Argimone Oil” என்ற உறுதிமொழி வாக்கியத்தை FSSAI கட்டாயமாக்கியுள்ளது.
லேபிளில் அர்ஜிமோன் எண்ணெய் இல்லையென்று தெரிவித்தும், எண்ணெய் பொட்டலத்தில் அர்ஜிமோன் ஆயில் இருப்பது கண்டறியப்பட்டால், கலப்படத்திற்கு மட்டுமின்றி, தவறான தகவல் வழங்கியதற்கும், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதற்கும் வழக்கு பதிவு செய்யப்படும். மினரல் ஆயில் என்பது லிக்விட் பாரஃபின் ஆகும். அது இரண்டு வகையில் உள்ளது. ஒன்று தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கானது (Industrial Grade)* மற்றொன்று உணவுத் தரம் வாய்ந்தது (Food Grade).லிக்விட் பாரஃபின்னை மருத்துவத் துறையில் லேக்ஸேட்டிவ்வாகப் பயன்படுத்துகின்றனர். Mineral Oil (High Viscosity – INS: 905d) மற்றும் Mineral Oil (Low Viscosity – INS: 905e) ஆகியவற்றை, மெருகூட்டல் பொருளாகப் (Glazing Agent) பயன்படுத்த FSSAI அனுமதித்து, அதற்கான தரங்களை நிர்ணயித்துள்ளது. (That means, Food Grade Mineral Oil is a permitted food additive).
ஆனால், உணவுத் தர மினரல் ஆயிலாக இருந்தாலும் சரி, தொழிற்சாலைக்கான உணவுத் தரமில்லாத மினரல் ஆயிலாக இருந்தாலும் சரி, அவற்றை உணவு எண்ணெயில் சேர்க்கக்கூடாது என்பது FSSAI-ன் முக்கிய விதியாகும் என்று விரிவான விளக்கம் அளித்து பேசினார். முடிவில் +2 வேளாண் பிரிவு மாணவர் வேல்முருகன், +2 கணித பிரிவு மாணவி ருத்திரதேவி கருத்து பரிமாற்றம் செய்தனர். உடற்கல்வி ஆசிரியை நர்மதா நன்றி கூறினார். +2 வேளாண் அறிவியல் பிரிவு, மற்றும் +2 கணித பிரிவு மாணவ-மாணவியர்கள், என்.எஸ்.எஸ். மாணவ தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


