இந்தியாவிலேயே முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த சைட் மியூசியம் திறக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தினை கடந்த 5 ந்தேதி கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்த மியூசியத்தினை தினந்தோறும் காலை 8 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிட மத்திய தொல்லியல் துறையினர் அனுமதித்து உள்ளனர். தற்போது ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் ஆதிச்சநல்லூருக்கு படை எடுக்கிறார்கள்.
எனவே எப்போதுமே ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் மக்கள் கூட்டம் உள்ளது. இதற்கிடையில் அதிகாரிகளும் இவ்விடத்துக்கு வருகை தருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரோசிட்டா, மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ ஆகியோர் பார்வையிட வந்தனர்.
இவர்கள் அங்கு வைக்கப்பட்ட வரைபடங்கள், மனிதனின் முழு எலும்பு கூடு, ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தின் மாதிரி வடிவமைப்பு, கண்ணாடி பேழைக்குள் அமைக்கபட்ட சைட் மியூசியம் ஆகியவற்றை பார்த்தனர். இவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். அவர்களுடன் மாவட்ட வளர்ச்சி பிரிவு உதவியாளர் மோகன்பாபு உள்பட பலர் வந்தனர்.
தொடர்ந்து ஆதிச்சநல்லூர் வருகை தரும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் கூடுதலாக விளையாட்டு பிரிவு, தாமிரபரணி ஆற்றில் படகு குழாம் உள்பட பல துவங்க வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


