காமராசர் 15 சூலை 1903 – 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்தியப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக 1960 களில் இந்திய அரசியலில் இவர் “கிங்மேக்கர்” (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டார். பின்னர், இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.
பிறப்பிற்கு பின் காமாட்சியாக அறியப்பட்ட காமராசர், பள்ளிப் படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திவிட நேர்ந்தது. இவர் 1920 களில் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த செயல்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937 இல், காமராசர் சென்னை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காமராசர் 1952 முதல் 1954 வரை மக்களவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 1954 இல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஏறக்குறைய பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வித் தந்தை என்று பரவலாக அறியப்படுகிறார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், 1976 இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவப்படுத்தியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் பல தெருக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காமராசர் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தின் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். இவரது பெற்றோர் இவருக்கு குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்ற பெயரை இட்டனர். இவரது பெற்றோர் இவரை ராசா என்று அழைத்தனர். இந்த இரு பெயர்களின் இணைப்பே பின்னர் காமராசா என மாறியது. காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கை இருந்தார்.
ஐந்து வயதில், காமராசர் உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவரின் தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவரது தாயார் குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பழங்கால தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டார், மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து முருகன் வழிபாட்டில் நேரத்தைச் செலவிட்டார்.
அரசியல் ஆர்வம்
காமராசர் 13 வயதிலிருந்தே பொது நிகழ்வுகள் மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டினார். தனது மாமாவின் கடையில் பணிபுரியும் போது, பஞ்சாயத்து கூட்டங்கள் மற்றும் பிற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். சுதேசமித்திரன் தமிழ் நாளிதழை ஆர்வமாகப் பின்தொடர்ந்தார். கடையில் தனது வயதுடையவர்களுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தார்.
காமராசர் அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் பாரதியார் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அரசியலில் நாட்டம் கொண்டதாலும், தொழிலில் நேரத்தைச் செலவிடாததாலும், இவர் திருவனந்தபுரம் நகரிலுள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான மர கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். கேரளத்தில் இருந்தபோது, இவர் தொடர்ந்து பொது நடவடிக்கைகளில் பங்கேற்றார். வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோவிலில் அனைத்து சாதி மக்களும் நுழைய வேண்டி நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்.{sfn|Sanjeev|Nair|1989|p=144}} காமராசர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், இவருக்கு மணமகளைத் தேட இவரது தாயார் முயற்சித்த பொது, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.


