இன்று பெரும்பாலான குடும்பங்களில் குடும்ப தலைவனும் தலைவியும் பணிக்குச் சென்று தங்களது பொருளாதாரத்தை உயர்த்தி பிள்ளைகளை வளர்க்கும் நிலையில் இருக்கின்றனர்.இதன் வளர்ச்சியாக, சம்பாத்தியம் மட்டுமே வாழ்வின் நோக்கமாக கொண்டு ஒழுகும் நிலையும் அதிகரித்து வருகிறது.
இதனால் இனிய குடும்ப வாழ்வின் அம்சங்களும் சமூகக் கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டு புதிய வாழ்வியல் முறைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது.
பொருளாதார மேம்பாட்டை மட்டுமே குறிக்கோளாக்கும் இத்தகைய ஒற்றை நோக்க போக்கானது மனிதனின் நடவடிக்கைகளை இயந்திரமயமாக்கி மனித இயல்புகளைத் தாறுமாறாக்கி வருகிறது.
இதனால் மனிதனின் உடல் மற்றும் மனதில் பல வித்தியாசமான மாற்றங்களும் வியாதிகளும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் எழுகின்றன.
உடலில் எழும் வியாதிகள் கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுகிறது.ஆனால் மனதில் ஏற்படும் நோய்கள் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அவை மனிதனில் நெறிபிறழ்ந்த,கட்டுப்படுத்த இயலாத செயல்களை ஏற்படுத்தும் போது தான் அவற்றை பேய் ,செய்வினை, பிசாசு ..என்று கூறி முறையான மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மாந்திரீகவாதிகளிடமும் போலி சாமியார்களிடமும் மாட்டிக் கொண்டு தத்தளிக்கின்றனர்.
குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்தின் அபிரிமித வளர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் வசதிகள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை இலகுவாக்கினாலும் அதன் மற்றொரு வகைத் தாக்கம்
மகிழ்ச்சியான வாழ்விற்கு எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக இன்றைய தொழில்கள் பெரும்பாலும் உடலுழைப்பை குறைத்து மூளையின் செயற்ட்பாடை அதிகரிக்கவேண்டியிருப்பதால்
மனம் என்னும் மனிதனின் மகத்தான செயலூக்கி அதிகமான அழுத்தத்திற்குள்ளாகி பல்வேறு மன நோய்களால் பாதிக்கப்படுகிறது.
அதிக கோபம், எரிச்சல், வெறுப்பு, விரக்தி …போன்ற உணர்ச்சிப் பெருக்கால், மனம் அழுத்ததிற்குள்ளாகி வாழ்கையையே இழந்து நிற்கும் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதிக அளவில் ஏற்படும் விவாக ரத்துக்கள், பாலியல் வன்முறைகள், அற்ப காரணங்களுக்காக தற்கொலை, கொலை போன்ற சமூகக்கேடான செயல்கள் யாவும் இதன் பிரதிபலிப்புக்களே!
இதனால் சாதாரணமான மனிதனின் வாழ்விலும் நடவடிக்கைகளிலும் விரும்பத் தகாக, மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாத நடத்தை மாற்றங்கள் நிகழ்கின்றன.
தனக்குள் தானே பேசிக் கொள்ளுதல்,, , நிதானமற்று நடந்து கொள்ளுதல் , குழந்தைகள் மீதும் பிறர் மீதும் அளவுக்கு அதிகமாக வெறுப்பை காண்பித்தல், வீண் சந்தேகம், முடிவெடுக்க முடியாமை, போன்ற அசாதாரண நடக்கைகளால்
இன்றைய இருபாலினரும் பாதிப்பிற்குள்ளாவதைப் பார்க்க முடிகிறது.
ஆனால் அத்தகைய அறிகுறிகளைப் பற்றி மனநலமருத்துவர்கள் ,இவை சாதாரணமாக மனித மனதில் ஏற்படும் நோய் தான் என்கிறார்கள். மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களால் தான் இவை பெரும்பாலும் ஏற்படுகிறது ,அதை எளிய மருத்துவத்தால் சீர்படுத்தி விடலாம் என்கின்றனர்.
மக்கள் தங்களது அறியாமையினால் மனநல மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெறுவதை மிகவும் கீழ்த்தரமான ,கேவலமான செயலாகக் கருதுகின்றனர் . நோய் கடுமையான பின்னர் கடைசி கட்டத்தில் கொண்டு வருகிறார்கள் .இதனால் சிலர் கடைசிவரை முழுமையாக கெணப்படுத்த இயலாமல் போய்விடுகிறது என்கிறார்கள்.
ஆரம்பத்திலேயே மனநல மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று விட்டால் நமது உடலுக்கு ஏற்படும் சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்றது தான் என்பதை மக்கள் உணராதவரை சமூகத்தில் மனநலனற்ற ஒரு பிரிவினரை நாம் பார்த்துக் கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும்.
இன்றைய பெருந்தொற்றான கோவிட் 19 என்ற விஷ வைரசால் உலகம் முழுவதும் முடங்கி கிடக்கின்ற நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் குறைவுப்பட்டு மக்கள் மனதளவில் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். அதிலும் அன்றாடம் கூலிவேலை செய்து வாழும் மக்களின் வாழ்கைநிலை மிகவும் வேதனையான நிலையில் இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு தங்களது இலாபத்தை பல லகரங்களில் கணக்கிட்டு வாழ்ந்த பெரும் வசதி படைத்தோரையும் ஆட்டங்காண வைத்திருக்கிறது.
இந்த இயற்கையின் திடீர் மாற்றம் மக்களின் மனதை பெருமளவு பாதித்து வருகிறது. கொரோனாவினால் உடலளவில் பாதிக்கப்பட்டோரை போன்று அதன் மூலம் மனதளவில் பாதிப்பிற்குள்ளான மக்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுக்க இயலாது.
இந்தச்சூழலில் மனநல ஆலோசனைகளும் எதிர் காலத்தைக் குறித்த நம்பிக்கைகளையும் திட்டமிட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இதனை மக்கள் விரும்பி நேரம் செலவிடும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கல்வி நிலையங்கள் மற்றும் சமய நற்போதகங்கள் மூலமாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம்.
இந்தியாவில் சமீப காலமாக மனநல மருத்துவமனைகளில் மக்கள் வந்து சிகிச்சைப் பெறுவது மக்களிடையே மனம் சார்ந்த அறிதலும் விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது. இருப்பினும் இன்னும் முழுமையாக அந்த அறிதலை மக்கள் பெறவில்லை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
ஐரோப்பிய நாடுகளில் நூறாண்டுகளுக்கு முன்பே மனநல மருத்துவமனைகளுக்கு சர்வசாதாரணமாக சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளும் நிலை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் , தொழில் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகிப்போர் போன்றோர் பெரும்பாலும் தங்களது மனநிலையை அவ்வப்போது சிறந்த மனநல மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து சீர்படுத்திக் கொள்ளும் பழக்கம் இருந்து வருவதாக டாக்டர் உதயமூர்த்தி
தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
நாமும் சிறுவயதில் இருந்தே மனம் பற்றின அறிவை நமது பிள்ளைகளுக்கு ஓரளவு நாம் தெரிவித்தே வளர்க்க வேண்டும்.மூட நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி அறிவியல் மனப்பான்மைகளில் வளர ஆர்வமூட்ட வேண்டும்.
மன நோயின் அறிகுறிகள் சாதாரண உடல் நோயை எவ்வாறு உணர்ந்து கொண்டு சீர்படுத்துகிறோமோ அப்படி சரி செய்யக் கூடியதாக பார்க்கப்பட வேண்டும். அப்போது தான் உடல் வலிமையோடு மனவலிமையும் உடைய ஒரு வலிமையான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்.
உலகில் வேறெந்த சக்தியை விடவும் வலிமையானது மனித சக்தியே. அச்சக்தி உடல்வளமும் மனவளமும் இணைந்த ஒன்று.மனநலம் உடல் நலத்தையும் உடல் நலம் மன நலத்தையும் பாதிக்க கூடியது. ஆனால் உடல் நலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டுவரும் நமது பழக்கம் மாற்றமடையும் போது தான் முழுமையான மனித சக்தியை நமது சமூகம் பெற இயலும்.