தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சாா்பில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், திமுக பவள விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று இரவு வந்தாா். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், முதன்முறையாக இம்மாவட்டத்துக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து சாலை வழியாக தூத்துக்குடி வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் தலைமையில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், மும்மூா்த்தி, செல்வராஜ், பேரூா் செயலா்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தூத்துக்குடி வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, புதூா் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகில் தெற்கு மாவட்டச் செயலரும், மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா் பி. கீதாஜீவன், எம்.எல்ஏக்கள் ஜீ.வி. மாா்க்கன்டேயன், எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மகளிா் அணி பிரசாரக் குழு செயலா் ஜெஸி பொன்ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி உள்பட பலா் பங்கேற்றனா்.முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.