ராணிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி படிப்பிலேயே ஆய்வை துவங்கியுள்ளார். அதுவும் தேரிமண்ணில் மறைந்து போன விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய ஆய்வு. இதை தேடும் போதுஎல்லாமே புதியதாக இருந்தது. இந்த தேரிக்காட்டில் எத்தனை வரலாறுகள் கொட்டிக் கிடக்கிறது. எனவே கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தாள்.
“தேரிக்காட்டில் ஒருரயில் ஓடியுள்ளது என்கிறீர்கள். தேரிக்காட்டில் வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர போராட்டம் நடந்துள்ளது என்கிறீர்கள். அது எல்லாம் இருக்கட்டும் இந்த தேரிக்காடு என்றால் என்ன?. அதுவே எனக்கு புரியவில்லை. எனவே முதலில் அதைப்பற்றி தெளிவாக தெரிவியுங்கள்”
ராணி, நூலகர் முத்துகிருஷ்ணனிடம் கேட்கவும். அவர் தேரிக்காட்டைப்பற்றிய வரலாற்றை கூற ஆயத்தனமனார். ஏன் என்றால் கொஞ்ச நாளாக எந்த இளந்தலைமுறைகளும் இவரிடம் வரலாறு குறித்து கேட்கவில்லை. எனவே அவர் ஆவலோடு வரலாறு சொல்ல தயாரானார்.
அவர் கூறப்போகும் வரலாறு மிகப்பெரிய நெடிய வரலாறு. அந்த வரலாற்றை நாமும் கேட்போம்.
தமிழகத்தின் செம்மண் வனம் என்று அழைக்கப்படும் தேரிக்காடானது தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை உலகுக்கு எடுத்து செல்லும் வகையில், தேரிக்காட்டிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போதும் கூட நிலவி வருகிறது.
வேறு எங்குமே காண இயலாத வளமிக்க செம்மண் திரடுகளாலான தேரிக்காடானது சிறந்த நீர்பிடிப்பு தலமாகவும் திகழ்வதால் இங்கு ஏராளமான அரியவகை வனவிலங்குகளும், பசுமையான மரங்களும் உள்ளன.
திருநெல்வேலி -தூத்துக்குடி மாவட்ட கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் வித்தியாசமான சிகப்பு நிற மண்ணுடன் விரிந்த பகுதிதான் தேரிக்காடுகள்.
தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும். ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.
அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும். தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.
நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டு பிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம். முற்காலத்தில் இதனால் திசை மாறியவர்கள் மாதக்கணக்காக தங்களது வாழ்விடத்துக்கு வரஇயலாமல் சுற்றி திரிந்த காலங்களும் உண்டு. இந்த தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேலப்புதுக்குடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில்கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார் கோவில் போன்றவை புகழ்பெற்றதாகும்.
இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியார், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் சுற்றித் திரிந்த பூமியாகும்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு. 1876-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் புரூட் புரூஸ் என்பவர் தேரிக்காட்டில் அகழாய்வு நடத்தினார். சாயர்புரம் முதல் செய்துங்கநல்லூர் வரையிலும் பரவி கிடந்த செம்மண் திரடுகளில் நடத்திய ஆய்வில் 72 பெருங்கற்கால கருவிகளை கண்டெடுத்தார். அவைகள் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என பட்டியலிட்டார். தேரிக்காட்டில் சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
தேரிக்காட்டை ஆராய்ச்சி செய்த உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பீர்பால் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மொர்க்கதாய், இது 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்று கூறினார்.
தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.
கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.
இதில் ஆச்சரியம் என்ன என்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச் செவேல் என்ற மணல் பகுதி, அந்த மாவட்டங்களின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான். அங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவை அல்ல. என ஒரு கருத்து உள்ளது. தாமிரச்சத்து மிகுந்த தாமிரபரணி ஆற்றை ‘செவ்வாறு’ என்றும் அழைப்பர். நெல்லை மாவட்டத்தில் பாய்ந்தோடும் ஆற்றை பெண் தாமிரபரணி என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆண் தாமிரபரணி என்றும் அழைக்கின்றனர். முன்பு தாமிரபரணி ஆற்றில் அடித்து வரப்பட்ட செம்மண் கடலில் பல ஆண்டுகள் படிந்ததாகவும், காலப்போக்கில் கடல் உள்வாங்கியதால் செம்மண் திரடுகள் வெளியில் தெரிவதாகவும் கூறுகின்றனர்.
அதேபோல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.
அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கின்றன.
ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு அதிசய பூமியை உருவாக்கிய அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.
அங்குள்ள மணல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது.
முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எனவே, தேரிக்காட்டின் மணலுக்கு அடியில், அந்தக் காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருக்கலாம்.
அங்குள்ள மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் பூமி தென்படுகிறது.
தென் மேற்கு சுழல் காற்றால் அந்தப் பகுதியின் மணல் இடம் மாறுகிறது. அப்போது, அங்குள்ள மரங்கள், வயல்வெளிகள், ஏன், சில கிராமங்களைக் கூட கால ஓட்டத்தில் அந்த மணல் மூடிவிடுகிறது என்று அங்கே ஆய்வு நடத்திய டாக்டர் கால்டுவெல் தெரிவித்து இருக்கிறார்.
இங்குள்ள மணல் மேடுகள் காற்றின் போக்குக்கு ஏற்ப இடம் மாறுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை 1848 ஆம் ஆண்டு ஆங்கிலேய கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவர் முன் வைத்தார்.
அவரது முயற்சியால் தேரிக்காட்டில், குதிரைமொழியில் ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. குதிரைமொழி தேரி இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
உலகில் வேறு எங்குமே காண இயலாத செழுமையான செம்மண் பாலைவனம் தென் தமிழகத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளில் செம்மண் பாலைவனமாகவே உள்ளது. ஆனால் நமது தேரிக்காடானது ஏராளமான மரங்களுடன் வளமையாக கொண்டுள்ளது.
கடல் உள்வாங்கிய பகுதியே தேரிக்காடாக மாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் தேரிக்காட்டில் உள்ள பாறைகளில் கடல் சிப்பிகளின் படிமங்கள் உள்ளன. இடைக்கற்காலத்தில் உருவானதாக கருதப்படும் தேரிக்காட்டில் செம்மண் 3 அடுக்குகளாக உள்ளன. இதில் மேலடுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளும், நடு அடுக்கு 5 ஆயிரம் ஆண்டுகளும், கீழடுக்கு 10 ஆயிரம் ஆண்டுகளும் பழமையானது.
செம்மண் சூழ்ந்த தேரிக்காட்டின் அடியில் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் புதைந்து உள்ளது. தேரிக்காட்டில் சில இடங்களில் பாறைகளும், சுரங்கத்தை போன்ற கிணறுகளும் உள்ளன. பழங்காலத்தில் வீரவள நாட்டில் அமைந்திருந்த இந்த தேரிக்காட்டில் கடைசிகால பாண்டிய மன்னர்கள் வாழ்ந்து போர் புரிந்ததாகவும் கூறுகின்றனர்.
தேரிக்காட்டை ஆராய்ந்த ராபர்ட் புரூட், கால்டுவெல் போன்ற அறிஞர்கள், இது 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான மைக்ரோலித்திக் காலத்தைச் சேர்ந்தது என்று கூறியுள்ளனர்.
தேரிக்காட்டில் அகழ்வாராய்ச்சி நடந்த போது, ஆதிச்சநல்லூர் போன்று மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், தேரிக்காட்டிலும் சில அபூர்வமான பொருட்கள் கிடைத்தன. சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்ட றியப்பட்டது.
இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டனர்.
பாலைவனம் போல இருக்கும் தேரிக்காட்டுக்கு அருகே வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டவர்கள், இந்த தேரியில் தங்களது மூதாதையர்களின் உடலை தாழிகளில் வைத்து புதைத்து இருக்கலாம். அங்கு இருந்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் ஆகியவையும் கிடைத்தன.
தேரிக்காட்டில் திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.
ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள். புத்தன் தருவை, வைரவன் தருவை போன்றவை இந்த தேரிக்காட்டு பகுதியில் தான் அமைந்துள்ளது.
தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும். அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.
இந்த இடத்தில் மாட்டிக்கொள்ளும் வழி தவறியவர்கள் நிலை, அந்தோ பரிதாபம் தான். இதை போன்ற இடங்களில் மாட்டிக்கொண்டு உயிர் விட்டவர்கள் வரலாற்றை, இப்பகுதி பெரியவர்கள் கதை கதையாக கூறுகிறார்கள்.
இந்த மண்ணில் வாழை, கொய்யா, மா, முந்திரி, முருங்கை, போன்ற பணப் பயிர்களும் வளர்கின்றன. இந்த விவசாய பூமிக்கு கிழக்கே கடற்காற்றும், மேற்கே இருந்து மழைக் காற்றும் இந்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.
ஒரே மூச்சில் நூலகர் முத்துகிருஷ்ணன் கூறி முடித்துவிட்டார்.
“இந்த தகவல் எல்லாம் புத்தகத்தில் இருக்கிறதா அய்யா”.
“இல்லை. இப்போ இந்த தகவலையெல்லாம் நமக்கு அள்ளித் தருவது கூகுள் சித்தப்பா”.
சிரித்தார் முத்துக்கிருஷ்ணன்.
“என்னய்யா சொல்றீங்க”.
“ஆமாம். நல்லதோ கெட்டதோ. நிறைய தகவல் இப்போ கூகுளில் கிடைக்கிறது. இளைய தலைமுறைகள் அதைத்தான் தற்போது பயன்படுத்துகிறார்கள்”.
“கூகுளில் இருப்பதை நம்பலாமா? அய்யா”.
“அதுக்குத்தானே ஆய்வாளர்கள் நீங்க இருக்கீருங்க. நீங்கத்தான் ஆய்வு செய்து அதை சீர் செய்து, சரியான தகவலை தரவேண்டும் “.
“பழைய காலத்துக்கு நூலில் விரிவாக இல்லையா அய்யா”.
“நிறைய இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தேரிக்காட்டை பற்றி எழுதி வைத்துள்ளார்கள். பிற்காலத்தில் வந்தவர்களும் எழுதி வைத்து இருக்கிறார்கள். அரசு ஆவணங்களிலும் இருக்கிறது. எல்லாமே ஆங்கிலத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்”.
ராணி மனதுக்குள் நினைத்தாள்.
“புத்தகத்தினை தேடி கண்டுபிடிப்பதோடு கூகுள் நமக்கு உடனே நமது கைபேசி வழியாக அனைத்தையும் தந்து விடுகிறதே”.
ராணிக்கு மிக சந்தோசமாக இருந்தது. மிகப்பெரிய ஆய்வுகக்கான அனைத்து தகவலும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. மகிழ்ச்சியோடு கூறினாள். “அய்யா அடுத்து என்ன என கூறுங்கள்”.
முத்துக்கிருஷ்ணன் தேரிக்காடு பற்றிய கூடுதல் தகவலை கூற ஆரம்பித்தார்.
தமிழகத்தின் பெருமைவாய்ந்த தேரிக்காட்டை மையப்படுத்தியும், அதனை நம்பி வாழும் எளிய மக்களின் வாழ்வியல்புகளை எடுத்துக்கூறும் வகையிலும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
பல்வேறு இலக்கியங்களிலும், நாவல்களிலும் செம்மண்தேரி பற்றியும், அங்கு வாழும் எளிய மக்களின் வாழ்வியல் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளன. பாலை திணை பற்றி குறிப்பிடும் பாடல்களிலும் செம்மண்தேரி பற்றி எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.
‘ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்தோரே ருழவன் போலப் பெருவிதுப் புற்றன்றோ னோகோ யானே’ என்ற குறுந்தொகை பாடலில், செம்மண் ஈரம் காயுமுன்னர் உழுது முடிக்க துடிப்பது போல தலைவியை காண விழையும் தலைவனின் உள்ளமும் துடிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மழைக்காலத்தில் செம்மண்தேரியில் சிவப்பு நிறத்தில் ஓடும் காட்டாறுகளை ‘செம்புலப் பெயனீர் போல’ என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் புவியியல் துறையின் டுவிட்டர் பக்கத்தில் செம்மண்தேரி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், ”தமிழகத்தின் ஒரே மணல் திட்டு பாலைவனமான தேரிக்காடு முழுவதும் சிவப்பு மணல் மேடுகள் உள்ளன. அவை அருகருகே 2 இடங்களில் அமைந்துள்ளன. இங்கு நிறைய அய்யனார் கோவில்கள் உள்ளதால், இது அய்யனாரின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாசரேத் மணிநகரைச் சேர்ந்த எழுத்தாளர் ஆறுமுகபெருமாள் ஒருவர் தேரியாயணம் நாவல் எழுதியவர். இவரது நாவல் தேரிக்காட்டு வாழ்வியலை கொண்டு எழுதப்பட்டது. அவர் இந்த தேரி மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். சிறுவயதில் தேரிக்காட்டில் விறகு பொறுக்கி தலைச்சுமையாக கொண்டு சென்று விற்று பிழைப்பை நடத்தி வந்தவர். அப்போது தேரிக்காட்டுக்குள் சென்று விட்டு திரும்பி வர வழி தெரியாமல் தவித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள உயரமான மரத்தில் ஏறி, அங்கிருந்து நாசரேத் ஆலய கோபுரத்தை பார்த்து, அந்த வழியாக நடந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
திக்கு திசையற்ற தேரிக்காட்டுக்குள் செல்கிறவர்கள் திரும்பி வர வேண்டும் என்பதற்காக தேரிக்கரையோரம் உள்ள நாசரேத், ஒய்யாங்குடி, பாட்டக்கரை, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் உயரமான கோபுரம் அமைத்து, அதில் இரவில் மின்விளக்கை ஒளிரவிட்டனர் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் திக்கு திசையற்ற தேரிக்காட்டில் வழி கண்டறியும் வகையில் ஒழுகுப்பாதை அமைத்தனர்.
அதாவது நாசரேத்தில் இருந்து தேரிக்குடியிருப்பு வரையிலும் தேரிக்காட்டுக்குள் சுமார் 20 அடி அகல பாதை செல்லும் வகையில், அதன் இருபுறமும் பனை விதைகளை விதைத்து வளர்த்தனர். இதேபோன்று தேரிக்காட்டின் குறுக்காக தெற்கு-வடக்காகவும் மற்றொரு ஒழுகுப்பாதை அமைத்தனர். அதன் வழியாக தபால் சேவையும் நடைபெற்றது.
மேலும் தேரிக்காட்டில் செழிப்புற்று வளர்ந்த பனை மரங்களில் இருந்து பதனீர் இறக்கி, கருப்பட்டி தயாரித்து விற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஏராளமான தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வாழ்வாதாரமான தேரிக்காடானது அட்சயபாத்திரமாக திகழ்கிறது.
தாமிரபரணி ஆற்றுக்கும், கருமேனியாற்றுக்கும் இடையே அமைந்த தேரிப்பகுதியானது மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கில் இருந்து தென்கிழக்காக சரிவாக உள்ளது. கடலில் சேரும் செம்மணலின் அடியில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால் அங்கு அதிகளவில் மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
செம்மண்ணில் அடர்ந்த மரங்களுடன் பரந்து விரிந்து கிடக்கும் தேரிக்காடானது பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு அடையாளமாக, நாசரேத் திருவள்ளுவர் காலனி தேரி ஆனைக்கால் பள்ளத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறைகள் உள்ளன. மேலும் தேரியில் பல்வேறு இடங்களில் கடல் சிப்பிகள் படிந்த பாறைகளும் உள்ளன. இங்கு பழங்கால கற்கருவிகளும் கண்டறியப்பட்டன. இதை குறிஞ்சி நிலங்கள் என கூறுகிறார்கள்.
திக்கு திசை தெரியாத அளவுக்கு அடர்ந்த வனமாக செழித்து வளர்ந்த மரங்களுடன் காணப்படும் செம்மண் பூமியை முல்லை நிலமாக கொள்ளப்படுகிறது. திசையன்விளை தேரியில் விவசாயிகள் முந்திரி, முருங்கை, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவது மருத நிலமாக அறியப்படுகிறது.
உவரி, குட்டம், பெரியதாழை கடலோர கிராமங்கள் வரையிலும் பரந்து விரிந்த செம்மண் பூமி நெய்தல் நிலமாகவும், காற்றில் இடம் மாறும் நெடிய செம்மண் திரடுகள் பாலை நிலமாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு ஐவகை நிலங்களுடன் சிறப்புற்று திகழும் தேரிக்காடு நாளடைவில் வளம் குன்றி அருகி வருகிறது. இதனை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
– தேரிக்காடு சிறந்த நீர் சேமிப்பு ஆதாரமாக விளங்குகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அனைத்து நீரையும் உள்வாங்கும். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பல ஆண்டுகள் மழை பொய்த்தாலும் தேரிக்காடு வறட்சியை தாங்கும்.
பஞ்சு போன்ற மிருதுவான செம்மண்ணில் இல்மனைட், ஹெமாடைட், கார்னெட் போன்ற அரியவகை கனிமங்கள் உள்ளன. இவற்றை விண்வெளி ஆராய்ச்சி, அணுமின் நிலையங்களில் பயன்படுத்துவதால் விலை மதிப்புமிக்கது. எனவே தேரிக்காட்டை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
பழங்காலத்தில் பெருங்கற்கால மனிதர்கள் தேரிக்காட்டில் வாழ்ந்தனர். இதற்கு அடையாளமாக நாசரேத், மெஞ்ஞானபுரம், சாயர்புரம் பகுதிகளில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. சாத்தான்குளம் பன்னம்பாறை, மானாடு போன்ற இடங்கள் பிற்கால பாண்டியர்களின் வாழ்விடமாக இருந்தது. தொல்காப்பியரின் சீடரான பனம்பாரனாரின் பெயரே பன்னம்பாறையானது. அங்கு தரைத்தள பாறையில் பெருவழித்தடம் உள்ளது.
தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் தேரிக்காட்டில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீரை சேகரித்து, குலசேகரன்பட்டினம் ஆலைக்கு கொண்டு வந்து சீனி தயாரித்தனர். இதற்காக திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கு தனி ரெயிலே இயக்கினர். பனை மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை ஓலை பொருட்கள் போன்றவற்றை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அரசுக்கும் அதிகளவில் அன்னிய செலாவணி கிடைக்கும்.
கடந்த 1798-ம் ஆண்டு சொக்கன்குடியிருப்பு செம்மண் தேரியில் புதைந்திருந்த அதிசய மணல்மாதா ஆலயம் கண்டறியப்பட்டது. தற்போது இது ஆன்மிக தலமாக விளங்குகிறது. இதேபோன்று எண்ணற்ற வரலாற்று சுவடுகளை தேரிக்காடு தன்னகத்தே மூடிக் கொண்டுள்ளது.
– பூமியின் கவசமாக தேரிக்காடு திகழ்கிறது. இந்த நிலப்பரப்பு முழுவதும் விவசாயம் செய்யலாம். இங்கு பயிரிடப்படும் அனைத்து பயிர்களும் செழித்து வளரும். ஆனால் செம்மண்ணில் உள்ள கனிமங்களை பிரித்தெடுத்தால் தேரிக்காடு பாலைவனமாகி விடும். பின்னர் இங்கு புற்கள் கூட முளைக்காது. எனவே தற்காலிக லாபத்துக்காக எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சிதைத்து விடக்கூடாது.
அடி முதல் நுனி வரையிலும் பலன் தரக்கூடிய கற்பக தருவான பனை மரங்கள் தேரிக்காட்டில் நன்கு செழித்து வளரக்கூடியது. பனை மரங்களின் வேர்கள் பல அடி ஆழம் வரையிலும் சென்று நீரை உறிஞ்சும். பனையில்தான் மிகப்பெரிய பொருளாதாரம் உள்ளது. எனவே பனை தொழிலை ஊக்குவிக்கவும், பனை தொழிலாளர்களை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் செம்மண் படிந்து உருவாகிய தேரிக்காட்டை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
செம்மண் தேரியானது சிறந்த நீர்பிடிப்பு தலமாக உள்ளதால், ஆண்டுதோறும் தாமிரபரணியில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை திசையன்விளை எம்.எல். தேரியில் தேக்கும் வகையில் செயல்படுத்தப்படும் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். எனவும் தேரிக்காடு சார்ந்த கோரிக்கை ஒன்று உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் செம்மண் வனமான தேரிக்காட்டில் எண்ணற்ற திரைப்படங்களும் படமாக்கப்பட்டன. கடந்த 1991- ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கிழக்கு கரை’ திரைப்படத்தின் பெரும்பகுதி மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலைச் சுற்றியே படமாக்கினர். அங்குள்ள வற்றாத சுனைநீரும் பல்வேறு காட்சிகளில் இடம் பெற்றன.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வாலியின் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மக்களின் மனதை கவர்ந்தது. இதில் ‘சிலுசிலுவென காற்று’ என்ற பாடலானது செம்மண் தேரி, சுனைநீரின் அழகினை முழுமையாக படம் பிடித்துக் காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. தொடர்ந்து செம்மண் தேரிக்காட்டில் பல்வேறு படப்பிடிப்புகளும் நடைபெற்றன.
தேரிக்கரையான நாசரேத் கச்சனாவிளையைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஹரி தனது படங்களில் முக்கிய காட்சிகளை தேரிக்காட்டில் படமாக்கி வெற்றி கண்டார்.
அதில் 2005-ம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தில் ‘ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்ற பாடலும், 2007-ம் ஆண்டு வெளியான தாமிரபரணி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும், 2010-ம் ஆண்டு வெளியான சிங்கம் படத்தின் ஆரம்ப சண்டைக்காட்சியும் தேரிக்காட்டில் படமாக்கப்பட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.
முத்துக்கிருஷ்ணன் வரலாற்றை சொல்லி முடித்து விட்டு பெரும்மூச்சி விட்டார். ஆய்வு முதல் சினிமா வரை தேரிக்காட்டுக்கும் இந்த சமுகத்துக்கு உள்ள தொடர்பை பேசி முடித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த பகுதியில் தான் குலசேகரபட்டினம் கொலை வழக்கில் சிக்கிய நம்ம ஊர் தியாகிகள் எல்லாம் மறைந்து வாழ்ந்தார்கள்”. என்று கூறி விட்டு அமைதியானார்.
ராணி யோசித்தாள். “தேரிக்காடே ஒரு மர்ம தேசம். இந்த தேரிக்காட்டில் மறைந்து வாழ்ந்த தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறு.
இவை அனைத்தையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அதற்காக தன்னை தயார் படுத்தினாள் ராணி. ஏற்கனவே தேரிக்காட்டில் ஓடிய ரயிலை நிறுத்தவும் சுதந்திர போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றார்கள் . அதையும் எப்படி என ஆய்வு செய்யவேண்டும்.
எனவே தேரிக்காட்டு களப்பணியில் இறங்க வேண்டிய நாளை குறித்தாள் ராணி.
( அறியப்படாத தியாகிகளை நோக்கி பயணம் செய்வோம்)