இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது தமிழ். இதன் இலக்கிய மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினால் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. இவை எல்லாம் இன்றும் எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருப்பதற்கு பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகாத அதன் வலுவான கட்டமைப்பு தான் காரணம்.
தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில் நம் முன்னைப் பழந்தமிழர் எவ்வளவு சிறந்து விளங்கி இருந்திருக்கின்றனர் என்பது நமக்கு எளிதில் புரிய வருகிறது அல்லவா.
இவ்வாறு தமிழின் சொல்வளம் சிறந்து விளங்கினாலும் பல்வேறு காரணங்களினால் பிற மொழிச் சொற்கள் நிறையவே கலந்திருக்கின்றன. பிறமொழிச் சொல் என்ற உணர்வின்றி இயல்பாக அச் சொற்களை நாம் அன்றாடம் பய்னபடுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறான் சில பிற மொழிச் சொற்களும் அதற்கு இணையான தூய தமிழ்ச் சொற்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தனித்தமிழ் சொற்களை பயன்படுத்தி தமிழின் தூய்மையையும் இனிமையையும் பெருக்குவோமாக.
பிற மொழிச் சொல்லும் இணையான தமிழ்ச் சொல்லும்
அகங்காரம் – செருக்கு,
அக்கிரமம் – முறைகேடு,
அக்கினி – நெருப்பு,
அத்தாட்சி – சான்று,
அனுபவம் – பட்டறிவு,
அங்கத்தினர் – உறுப்பினர்,
அங்கம் – உறுப்பு,
அஞ்ஞானம் – அறியாமை,
அதிகரித்தல் – கூடுவது,
அதிசயம் – வியப்பு,
அவகாசம் – ஓய்வு,
அசல் – முதல்,
அந்தஸ்து – நிலை,
ஆசாமி – ஆள்,
அதிர்ஷ்டம் – நற்பேறு,
அகிம்சை – தீங்கு செய்யாமை,
அசுத்தம் – துப்புரவின்மை,
அநாதை – ஆதரவற்றவர்,
அசரிரீ – வான் வழி அருள் வாக்கு,
அபூர்வம் – அருமை,
அம்சம – கூறு,
அர்ச்சனை – மலர்வழிபாடு,
அத்தியாவசியம் – இன்றியமையாதது.
அநாவசியம் – வேண்டாதது.
அநாசாரம் – ஒழுக்கமின்மை,
அநீதி – முறையற்றது,
ஆச்சரியம் – வியப்பு,
ஆட்சேபணை – மறுப்பு,
ஆமோதித்தல் – வழிமொழிதல்
ஆராதனை – வழிபாடு,
ஆஜர் – வருகை,
இஷ்டம் – விருப்பம்,
உதாரணம் – எடுத்துக்காட்டு.
உபசாரம் – முகமன் கூறல்,
உதாசீனம் – பொருட்படுத்தாமை,
உத்தரவாதம் – பொறுப்பு,
உத்தரவு – கட்டளை
member என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பாக வடமொழி வாடையுடன் கூடிய அங்கத்தினர் என்ற சொல் புழக்கத்தில் இருந்த காலம் உண்டு. இந்தச் சொல்லை உறுப்பினர் என்ற தனித்தமிழ் சொல்லாய் மொழி பெயர்த்தது மகாகவி பாரதி தான். இன்று உறுப்பினர் என்ற சொல் தான் புழக்கத்தில் இருக்கிறது. இப்படி ஏராளமான பிறமொழிச் சொற்களை இன்றும் புழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து தனித் தமிழ்ச் சொற்களை பயன்படுத்த முயலுவோம்.


