மறுநாளே வேலையை ஆரம்பித்துவிட்டாள், ராணி. நேராக தூத்துக்குடி மாவட்ட நூலகரை சந்தித்தாள்.
“அய்யா. என் பேரு ராணி. நான் தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் பற்றி ஆய்வு செய்ய வந்திருக்கேன்” என்றாள்.
சிரித்தார் நூலகர். “நல்ல ஆய்வுதான். உன் சிறு வயதில் மிகப்பெரிய சுமையை ஏந்தியிருக்கிறாய். மிகச்சிறப்பு” என்றார்.
நூலகரின் பேச்சு ராணிக்கு உற்சாகத்தினை தந்தது.
“உள்ளே போய் நூல்களை தேடிப்பார்த்தாயா?” என கேட்டார்.
“தேடிப்பார்த்தேன் அய்யா. பெரிய அளவில் நூல் கிடைக்க வில்லை”. ராணியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சிரித்தார் நூலகர் முத்துகிருஷ்ணன்.
“இங்கே பாரு ராணி. நீ எடுத்து இருக்கிற இந்த தலைப்பு மிக வித்தியாசமானது . ஆனால் இதைப்பற்றி தெரிந்துகொள்ள நீ மாவட்டம் முழுவதும் அலைய வேண்டியது இருக்கும்”.
ராணி புன்சிரிப்புடன் கூறினாள்.
“நான் அலைய தயாரா இருக்கேன் அய்யா. எனக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றி பேசும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால கண்டிப்பா நான் அலையிறேன் அய்யா”.
என்றாள். அவளுடைய உறுதியான நிலைப்பாட்டை பார்த்தவுடன் புன்னகைத்தார் நூலகர் முத்துக்கிருஷ்ணன்.
சில புத்தகங்களை எடுத்து தனது மேஜையின் மேல் வைத்தார் . “இங்கே பாருமா. இதெல்லாம் நம்ம மாவட்டத்து தியாகிகளை பத்தி பல எழுத்தாளர் எழுதுனது. இதை பார்த்தா உனக்கு சில விசயம் தெரியும்”.
ராணி அந்த நூல்களை எடுத்துப் பார்த்தாள்.
முத்துகிருஷ்ணன் தொடர்ந்தார். “தியாகிகள் வரலாற்றை முதல் பதிவு செய்தவர் ஒரு தியாகிதான். இவர் பெயர் சோமயாஜிலு. இவர் அந்த காலத்தில எம்.எல்.ஏவா இருந்தவரு. சொந்த ஊரு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தான். அப்புறமாக பொங்கி எழுந்த பொருநை என்ற தலைப்பில் கணபதி ராமன் அய்யா ஒரு புத்தகம் எழுதியிருக்காங்க. அவரு தென்காசி மாவட்ட அய்யாபுரத்தை சேர்ந்தவர். தென்பொருநைக் கரை தேசபக்த மாமணிகள் என்ற தலைப்பில் முனைவர் போஸ் என்பவர் எழுதியிருப்பார். இவர் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில பேராசிரியரா இருந்தவர். திருச்செந்தூர் வட்டா தியாகிகள் என்ற தலைப்பில் ஆறுமுகனேரி முனைவர் த.த.தவசிமுத்து அய்யா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உடன்குடி சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் செ.பெருமாள் எழுதியிருக்கிறார். தற்போது நமது மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசு அறியப்படாத தியாகிகள் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலையெல்லாம் இதோ தனியாக சேகரித்து வைத்திருக்கிறேன்”.
என அந்த நூல்களை காட்டினார்.
மகிழ்ச்சியுடன் ராணி அதை பார்த்தாள். மிக சந்தோசமாக இருந்தது. தேடி அலைய வேண்டும் என்றார்கள். இங்கே நூலகர் அனைத்து நூலையும் ஒரே இடத்தில் சேகரித்து தருகிறார். கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டி விட்டாள்.
நூலகர் சிரித்தார். “இங்கே பாரு ராணி. உன் ஆர்வத்துக்காக நான் இந்த நூல்களை தந்து விட்டேன். ஆனால் இந்த நூல்களை சேகரிக்க இந்த எழுத்தாளர்கள் படாத பாடு பட்டு இருப்பார்கள். தியாகிகளை தேடி வீடு வீடாக வீதி வீதியாக அலைந்து இருப்பார்கள். எனவே இந்த நூலை படித்து எழுதுவதை விட, நீ பல ஊர்களுக்கு தேடிப்போய் பல்வேறு புது விசயங்களை தேடிக்கண்டு பிடித்து எழுது அப்போதுதான் இந்த பயணம் நிறைவு பெறும்” என்றார்.
ராணி மகிழ்ச்சியோடு அவரை நோக்கி வணங்கி நின்றார்.
“ராணி உன் ஆர்வத்தினை கண்டு மகிழ்கிறேன். உனக்கு நமது தூத்துக்குடி மாவட்டத்தினை பற்றி சிறிய அறிமுகம் செய்கிறேன். அதை முதலில் கேட்டுக்கொள்”. என்று அந்த மாணவியிடம் பேச ஆரம்பித்தார்.
நூலகருக்கே இந்த அறிவான மாணவியை பார்த்தவுடன் ஆர்வம் பிறந்து விட்டது. ஏன் என்றால் கல்லூரியில் இதுபோன்ற வாய்ப்பு கொடுத்தால் எப்படியாவது முடிக்க வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் முடிக்கும் மாணவிகள் தான் ஏராளம். தன்னிடம் கூட சிலர் வருவார்கள். இந்த தலைப்பில் எனக்கு ஒரு 50 பக்கம் எழுதி வைத்திருந்த குறிப்பி இருந்தால் தாருங்கள். நான் அப்படியே பயன்படுத்திக்கொள்கிறேன் என்பார்கள். இல்லையென்றால் நெட்டில் கிடக்கிறதா? சொல்லுங்கள் நான் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணி, அதை ஒப்படைத்துக்கிறேன் என்று ஆர்வம் இல்லாமல் சொல்லுவார்கள். சிலர் ஒரு படி மேலே போய் எவ்வளவு ரூபாய் செலவானாலும் பராவாயில்லை. என் பெயரில் இந்த தலைப்பில் ஒரு கட்டரை எழுதிகொடுங்கள் என்று தான் சொல்லுவார்கள். ஆனால் இங்கே ஒரு கல்லூரி மாணவி சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி தேட வந்திருக்கிறாள். இவள் முகத்தினை பார்த்தாலே தெரிகிறது. இடையில் விட்டு விட்டு ஓடி விடமாட்டாள். எந்த ஊர் என்றாலும் தேடிச்சென்று விடுவாள் போலவே இருந்தது. எனவே தான் தனக்கு தெரிந்தவற்றை இவளிடம் கூறிவிடலாம் என நூலகர் முத்துக்கிருஷ்ணன் நினைத்தார்.
“சொல்லுங்க அய்யா”. ஆர்வத்துடன் அமர்ந்தாள் ராணி.நூலகர் முத்துக்கிருஷ்ணன் மாவட்டத்தினை பற்றி பேச ஆரம்பித்தார்.
தமிழ்நாட்டில் இருபதாவது மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கினார்கள். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பெயரால், சிதம்பரனார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார்கள். 1986 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19ஆம் நாள் இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல வட்டங்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் பிரித்து உருவாக்கப்பட்டதே சிதம்பரனார் மாவட்டம். தற்போது தூத்துக்குடி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
பரந்த திருநெல்வேலி மாவட்டத்தை, இரு மாவட்டங்களாகப் பிரித்து, திறமையாகவும் அரசின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், நிதி, நீதி நிர்வாக நலன் கருதியும் தூத்துக்குடி மாவட்டம் உருவானது.
.தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 22 நவம்பர் 2019 அன்று தென்காசி என்ற மற்றுமொரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டப் பகுதி மிகத் தொன்மையான பூமியாகும். டாக்டர் கால்டுவெல் பாதிரியார் இப்பூமியின் தொன்மைச் சிறப்பைப் பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் அமைந்துள்ள கொற்கைத் துறைமுகத்தோடு பல நாடுகளும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றி வளர்த்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழரின் தொன்மையான நாகரீகமான ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என போற்றப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகத்தின் நாகரீகம் தென் தமிழகம் தாமிரபரணிக் கரையில் இருந்து தான் எழுதப்படவேண்டும் என்றுகூறி இருக்கிறார். அதற்குக் காரணம் ஆதிச்சநல்லூர் நாகரீகம். சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் என தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் இடங்கள் எல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உள்ளது.
இப்பகுதி ‘தென்பாண்டி நாடு’ என்று போற்றப்பட்டது. பாண்டியப் பெருமன்னர்க்குப் பெருமையளித்த முத்து, இம்மாவட்டதின் கடற்கரையில் குளிக்கப்பட்டது. ‘முத்து குளிப்பதொரு தென்கடலே’ என்னும் பாரதியின் வரிகள் போற்றிக்குறிப்பது இப்பகுதியைத்தான். தற்போது இங்கு சங்கு குளிக்கப்பட்டு வருகிறது.
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், பாட்டுக்கொரு புலவன் பாரதி போன்ற பெருமக்களின் தாயகம் என்ற பெருமையையும், வெள்ளையருக்குத் தொல்லை தந்து, இப்பூமியிலிருந்து அவர்களை வேருடன் களைய வீர விளையாட்டு விளையாடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த மண் என்ற பெருமையையும் ஒரு சேரப்பெற்றது இம்மாவட்டமே.
அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கடலையூர் சுதந்திர போராட்டம், மணியாச்சி ஆஷ்துரை கொலை வழக்கு, தூத்துக்குடி நூற்பாலை போராட்டம் , குலசேகரபட்டணம் லோன் துரை கொலை வழக்கு எனச் சுதந்திரப் போராட்டத்தில் அறியப்படாத வீரர்கள் மிக அதிகமாக உள்ள மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தான். சுதந்திர பேராட்டத்தின் நினைவு சின்னங்கள் பல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் சுதந்திர போராட்ட வீரர்களால் நிறுவப்பட்ட நினைவுத் தூணும், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் நினைவுத் தூணும் மிகச்சிறப்பானதாகும்.
மூவேந்தர் காலத்தில் முத்துக் குளிக்கும் துறைமுகமாக விளங்கிய தூத்துக்குடி துறைமுகம், இன்று சுதந்திர பாரதத்தின் சொத்துக்குவிக்கும் துறைமுகமாக விளங்குகிறது. சிதம்பரனாரின் கனவுகளின் அடிக்காலாக மட்டுமல்ல & அவருடைய நினைவாலயமாகத் திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டம்.
தற்போதும் சுதந்திரப்போராட்ட சுவடுகளை சுமந்துக்கொண்டு நிற்கும் தூத்துக்குடி மாவட்டதில் உள்ள தியாகிகளை பற்றி சரியான நேரத்தில் சரியாக ஆய்வு பண்ண வந்திருகிறாய்.உன்னை பாராட்டுகிறேன். என்று சொல்லி முடித்தார் முத்துக்கிருஷ்ணன்.
ராணிக்கு பெருமிதமாக இருந்தது. முதலிலேயே நல்ல மனிதரிடம் வந்து இருக்கிறோம்.
பெரும்பாலுமே நூலகர்களிடம் போய் நூலைக்கேட்டாள். “போ. போய் தேடிப் பார்த்துக்கொள் என்று தான் சொல்வார்கள். ஆனால் இங்கே ஒருவர் தேவையான நூல்களை நமக்கு தந்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஆய்வுக்காக முதல்கட்ட முன்னுரையையும் எடுத்து தந்திருக்கிறார்”.
சிரித்துக்கொண்டே பேசினார் நூலகர் முத்துகிருஷ்ணன். “என்ன ராணி முதல் நாள் அறிமுகத்திலேயே இவ்வளவு வரலாற்றை சொல்லுகிறேன் என்று ஆச்சரியப்படுகிறயா?”
ராணி தலையாட்டினாள். அவளுக்கு பேச்சு வரவில்லை. நூலகர் தந்த தகவலால் திக்கு முக்காடிப்போயிருந்தாள். அதோடு மட்டுமல்லாமல் என்ன பேசி இவருக்கு நன்றி சொல்வது என்று தெரியாமல் தவித்தப்படியே இருந்தாள்.
நூலகர் முத்துக்கிருஷ்ணன் தொடர்ந்தார்.
“இன்னைக்கு சொந்த வரலாற்றை தேடிக்கண்டு பிடிக்க ஆளில்லை. ஒருவர் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் என எந்த உயரிய படிப்பை படித்தாலும் மிகப்பெரிய பதவிக்கு சென்றாலும் அவர்களுடைய நேர்முகத்தேர்வில் சொந்த மாவட்டத்தினை பற்றித்தான் வாய் வழி கேள்விகளைத்தான் அதிகம் கேட்பார்கள். அந்த சமயத்தில் சொந்த ஊரைப் பற்றி அறியாதவர்கள் அடுத்தக் கட்டம் செல்ல இயலாது”. தனது முன்னால் வைத்திருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துக்கொண்டார்.
ராணிக்கு ஆச்சரியமாக இருந்தது. முத்துக்கிருஷ்ணன் தொடர்ந்தார். “இது போல மாணவர்கள் வருவார்கள் என்று தான் உள்ளூர் சம்பந்தப்பட்ட நூல்களையெல்லாம் நானே எடுத்து வைத்திருக்கிறேன். தேடி வருவோருக்கு இதை கொடுத்து மகிழ்கிறேன்” என்றார்.
“அய்யா இந்த நூலை எல்லாம் நான் எடுத்துக்கொள்ளலாமா?”
அவசரமாக மறுத்தார் முத்துக்கிருஷ்ணன்.
“தப்பாக நினைக்க கூடாது ராணி . இந்த நூல்கள் அபூர்வமானது. இதன் நகல்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். ஆகவே இதில் ஒவ்வொரு நூலாக எடுத்து சென்று விட்டு படித்து விட்டு, அடுத்த நூலை எடுத்துக்கொள். இல்லையென்றால் அனைத்து நூலையும் நகல் எடுத்துக் கொண்டு மூல நூலை என்னிடம் கொடுத்து விடு” என்றார்.
“என்னடா இதுவரை மிகவும் சந்தோசமாக பேசியவர். தீடீரென்று கண்டிசன் போடுகிறாரே”. என வருத்தப்பட்டார் ராணி.
அதற்கும் பதில் சொன்னார். “ராணி இதுபோன்ற புத்தகத்தினை வாங்கிச்செல்கிறார்கள். திருப்பி தருவதில்லை.அவர்கள் படித்து விட்டு பழைய புத்தக கடைக்கு போடுகிறார்கள். இல்லையென்றால் கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். இதன் அருமை தெரியாமல் அவர்கள் புத்தகத்தினை கிழித்து புளி உருண்டை உருட்டி கொடுத்து விடுகிறார்கள். அதனால் நூலை மொத்தமாக தருவது இல்லை. இந்த நூல்கள் பலருக்கு உதவ வேண்டும் . எனவே தான் இதுபோன்று கண்டிசன் எல்லாம் போடுகிறேன். நீ தப்பா நினைக்காதே. எங்களோடு ஒத்துழைத்துக்கொள்” என்றார்.
அவர் சொன்னது உண்மைதான். இதனால் தான் நிறைய புத்தகம் அழிந்து போய் விட்டது. பல புத்தங்கள் மறு பிரிண்ட் வரவில்லையென்றாலும், பாதுகாக்க யாரும் இல்லாத காரணத்தினால் தகவல் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் போய் விடும். ஆகவே நூலகர் சொல்வது சரித்தான் என உணர்ந்தாள் ராணி.
தகவலைச்சொல்லும் முத்துக்கிருஷ்ணன் செயலை ஆர்வமாக கேட்டாள். எனவே தொடர்ந்து பல வரலாறுகளை பேச ஆரம்பித்து விட்டார் முத்துக்கிருஷ்ணன்.
“ராணி தூத்துக்குடி மாவட்டத்தில் தியாகிகள் பற்றிய சம்பவம் எல்லாம் மிகவும் சிறப்பாக போற்றப்படுகிறது. குறிப்பாக சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன் விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடிய தேரிக்காட்டு ரயில், பழைய தலைமுறைக்கு மட்டுமே பரிச்சயம். இன்று அ தைப்பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. அந்த ரயில் நமது நாட்டை விட்டு செல்ல காரணமே நம்மவர்களின் சுதந்திர போராட்ட தியாகிகள் தான்”.
“என்ன அய்யா சொல்லுறீங்க”. ராணிக்கு அடுத்த ஆச்சரியம் காத்து இருந்தது.
“எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் கொம்மடி க்கோட்டையில இருந்தாரு. அவரு பக்கத்து வீட்டில் சிம்சோன் என்ற 83 வயது பெரியவர் இருந்தார். நான் என் நண்பரை பார்க்க போன போது, அவர் எங்கிட்ட இந்த ரயிலை பத்தி பேசியிருக்காரு. அவரு திசையன்விளையில உள்ள அவரு பாட்டி வீட்டுக்கு 2, 3 முறை இந்த ரயில போய் வந்திருக்காரு. அப்போ அவருக்கு 6 வயசிருக்குமாம்”
ருசிகரமான கதை ஒன்றை முத்துக்கிருஷ்ணன் கூறப்போகிறார் என்றவுடன் ஆர்வமானாள் ராணி.
“அவர் என்கிட்ட பேசும் போது “என் டிரவுசரை கழட்டிட்டுத் தான் எங்கப்பா அந்த வண்டியில கூட்டிட்டுப் போனாரு. ஏன்னா, அம்மணமாப் போற சின்ன புள்ளைக்கு டிக்கெட் கெடையாது. கால் துட்டுக்கு அந்த ரயில்ல ஓமப்பொடி கொடுப்பாங்க. அப்படியே நாக்குல எச்சி ஊறும். அந்த ட்ரெயின்ல குடிக்கிறதுக்கு கலரு கேட்டு நா அழுதுருக்கேன்’’ என்று சொல்லும் போது எனக்கு அந்த ரயில் வண்டி என் கண் முன்னே வந்து நிற்கும்”. என்று கூறி விட்டு முத்துக்கிருஷ்ணன் சிரித்தார்.
ராணி மிக ஆர்வமாக அவரிடம் கேட்டாள். “அய்யா தூத்துக்–குடிக்கு ரயில் தண்டவாளம் இருக்கும், திருச்செந்தூரில் ரயில் நிலையம் இருக்கு. நீங்க என்னய்யா தேரிக்காட்டு ரயிலுன்னுசொல்றீய. திசையன் விளையில ரயில் நிலையம் இருந்துச்சுன்னு சொல்றீய. ஆச்சரியமா இருக்கே”
உண்மைத்தான். தேரிக்காடே ராணிக்கு புதியதாகத்தான் இருந்தது. அவள் ஊரோ கரிசல் பூமி. கரிசல் காட்டைத்தான் அவர் பார்த்து இருக்கிறாள். வானம் பார்த்த பூமி. இங்கு மழை பெய்தால் மட்டுமே விளைச்சல். மற்ற நேரம் வறண்டு கிடக்கும். மழை பெய்தால் விளை காடுகளை திருத்தி அதில் கம்பு, சோளம், கடலை உள்பட தானியப் பயிர்களை விதைப்பார்கள். பருத்தி விளைய வைப்பார்கள். இதற்காக பல இடங்களில் ஸ்பின்னிங் மில் இருக்கும்.
தூத்துக்குடியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். இதுவோ நெய்தல் பூமி. நெய்தல் நிலம் என்றால் கடற்கரை பகுதி. கடலும் கடல் சார்ந்த இடமும். இங்கு 7 முத்துக்குளித்துறை இருந்தது என கேள்விப்பட்டிருக்கிறாள். இங்குள்ள கொற்கை துறைமுகம் பற்றி படித்திருக்கிறாள். தூத்துக்குடி துறைமுகம் வரை தெரிந்து வைத்திருக்கிறாள்.
ஆனால் இது என் தேரிக்காடு. தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படியொரு இடம் இருக்கிறதா? மிக புதியதாக இருந்தது ராணிக்கு.
எனவே ஆச்சரியத்துடன் கேட்டாள் ராணி. “அய்யா தேரிக்காடு என்றால் என்னய்யா?”.
பெரும்பாலும் நூலகத்துக்கு வருபவர்கள் யாரும் நூலகரோடு பேச மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே பேசுவார்கள். ஆனால் இந்த அளவுக்கு சந்தேகம் கேட்க மாட்டார்கள்.ஆனால் ராணி சந்தேகம் கேட்டவுடன் உற்சாகமடைந்தார் நூலகர்.
“ராணி தூத்துக்குடி மாவட்டத்தில் ஐவகை நிலங்கள் உள்ளது. அதில் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. குறிப்பாக வல்லநாடு மலை, கோவில்பட்டி அருகே உள்ள குருமலையை நாம் குறிஞ்சி நிலமாக சொல்லலாம். மேய்ச்சல் நிலைமான கரிசல் பூமி முல்லை என்று போற்றப்படுகிறது. வயற்வெளிகளை கொண்டு வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம் என போற்றப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலூகாவில் உள்ள ஆற்று படுகை நிலங்கள் மருதநிலமாகும். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும். கடற்கரை சார்ந்து வேம்பாற்றில் இருந்து பெரியதாழை வரை கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாக உள்ளது. அதில் பாலை வனமாக கருதப்படுவது தான் தேரிக்காடு. இந்த பகுதி ஏரல் தாலூகா சாயர் புரத்திலும் நாசரேத் பகுதியில் இருந்து சாத்தான்குளம் , திசையன்விளை பகுதி வரையிலும் செம்மண் தேரியாக காட்சியளிக்கிறது. இதையும் சேர்த்துதான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐவகை நிலங்கள் உள்ளது என பட்டியலிடுகிறார்”.
நூலகர் முத்துக்கிருஷ்ணன் ஒரு தகவல் சுரங்கம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
“இந்த தேரிக்காடு பகுதி வழியாகத்தான் முன்பு காலத்தில் ஒரு ரயில் இயங்கி உள்ளது. இந்த ரயிலை பற்றி ருசிகரமான சம்பவங்கள் நிறைய உள்ளது”.
அடுத்தப்படியாக ஒரு தகவலை நூலகர் சொல்லப்போகிறார் என ஆர்வமாக கேட்டாள் ராணி.
“நான் ரொம்ப நாளைக்கு முன்னால 100 வயசு ஜெயமுருகையான்னு ஒரு அய்யாவை பார்த்தேன். அவரு இந்த ரயிலை பத்தி ரொம்ப சந்தோசமா பேசினாரு. அவர் படுகையில இருக்கும் போது கண்ணீர் மல்க என்கிட்ட சொன்னாரு”.
தாத்தா கூறிய வார்த்தைகள் நூலகர் கண் முன்னால் வந்தது.
“அந்த ரயில இப்ப நெனச்சாலும் மனசு நெறஞ்ச மாதிரி இருக்கு. பிராயத்துல மாட்டு வண்டில தொங்கிட்டு போறதுக்கே நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். பாரி கம்பெனிக்காரன் ரயிலும் அதே வேகத்துல தான் போகும். அதுல ஏறி ஏறி இறங்குறதுன்னா ஏகப்பட்ட குஷி தான். நான் பிச்சிவிளை ஸ்டேஷன்ல 6 மாசம் மட்டும் ஸ்டேஷன் மாஸ்டராவே இருந்திருக்கேன். மாசம் 23 ரூவா சம்பளம். அன்னைக்கி அது பெரிய காசு’’ என்று சொன்ன அந்த காலம் முத்துக்கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறது. அதை ராணியிடம் பகிர்ந்து கொண்டார்.
“நான் அந்த ரயிலை கண்ணால பாக்கலை. ஆனா இவுக சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் மனசுல நிக்குது”.
நூலகர் குலசேகரப்பட்டினம் ரயிலை பத்தி சொன்ன கதையெல்லாம் ராணி மிகவும் சந்தோசத்தினை வரவழைத்தது. எனவே தொடர்ந்து கதை கேட்க ஆரம்பித்தாள். அதோடு மட்டுமல்லாமல் முத்து கிருஷ்ணன் சொல்ல சொல்ல செய்தியை குறிப்பெடுக்கவும் ஆரம்பித்தாள்.
திசையன்விளை கருப்பட்டிக் கடை உரிமையாளர் ஜெயராமன் அய்யான்னு ஒருத்தர் என்கிட்ட பேசியிருக்காரு. அதையும் நினைத்துப்பார்க்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
‘‘இன்னிக்கி நீங்க பார்க்கிற திசையன்விளையே வேற தம்பி. அந்தக் காலத்துல இதே தேரிகாட்ல பயினி வாசனை கமகமன்னு தூக்கும். பொழுது விடியறதுக்குள்ளே பயினிய கொண்டாந்து பாரிக்காரன் வச்சிருக்கிற தொட்டியில அளந்து ஊத்திடுவாங்க.
தேரிக்காட்டு பயினிய கொண்டு போறதுக்கு அவங்க திசையன்விளைல இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாயே பதிச்சிருந்தாங்க. குழாயில பயினிய ஊத்தி விட்டா சீனி ஆலைக்குப் போய் சேந்துரும். இதே தேரி காட்ல அப்ப 50 பனமரம் இருந்தா போதும், ஆயுசுக்கும் நிம்மதி!’’ என என்னிடம் கூறியிருந்தார்.
“ஆகா வரலாறு நீண்டு கொண்டே போகிறதே. மிகச்சிறப்பாக இருக்கிறதே”. ராணி மிகவும் ஆர்வமானாள். முத்துக்கிருஷ்ணன் தொடர்ந்தார்.
பதனீரும், கருப்பட்டியுமே தேரிக்காட்டு ரயிலின் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கிறது. ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்தியதின் பேரில், பிற்காலத்தில் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு அடி அகலம் கொண்ட இந்த ரயில்பாதையில் திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன் குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, உடன்குடி ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் இருந்து இருக்கின்றன.
அந்த காலத்தில சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ‘பாரி அன் கோ ’ நிறுவனம் குலசேகரன் பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்கு வரத்துக்காக ‘குலசேகரன் பட்டினம் லைட் ரயில்வே’ அதாவது கே.எல்.ஆர் என்ற பெயரில் ரயில் பாதை அமைத்துள்ளது.
அந்த காலத்தில் திருச்செந்தூரில் இருந்து திசையன் விளைக்கும், குலசேகரன்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாக சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. இந்த தேரிக்காட்டு ரயிலின் பயணம், அந்த கிராமங்களில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்க ஆரம்பித்து இருந்தது.
குலசேகரன்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், ‘பானி’ எனப்படும் களி போன்ற பதநிலையில் தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சீனியாக மாற்ற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது’’ முத்துக்கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தாள் ராணி.
“அய்யா. இந்த ரயிலுக்கு சுதந்திர போராட்டத்துக்கு என்னய்யா சம்பந்தம்”. என்று கேட்டாள்.
“இருக்கு. நிறைய சம்பந்தம் இருக்கு. உப்புச்சத்தியாகிரகம் 1930 நடந்தது. அந்த சமயத்தில தூத்துக்குடி மாவட்டம் கொதிச்சி எழுந்துச்சு”.
ராணி ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள். “அய்யா. காந்திக்கும் தூத்துக்குடிமாவட்டத்துக்கு ஒற்றுமை இருக்கா?”.
“ஆமாம். தூத்துக்குடி மாவட்டத்தினைப் பொறுத்தவரை காந்திய வழியில் தான் சுதந்திர போராட்டம் நடந்தது. எவருக்கும் எந்த துன்பத்தையும் தரக்கூடாது. வன்முறை கூடாது. அகிம்சை அமைதி வழிமுறையில் விடுதலை பெறுவதே இலட்சியம். என்று மூன்று விதத்தில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று சுதந்திர போரட்ட வீரர்கள் நினைத்தனர். அதன்படிஆங்கிலேய அரசிடமிருந்து பெற்ற பட்டங்களையும், கௌரவ விருதுகளையும் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் திரும்ப ஒப்படைப்பது. கடையடைப்பு, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள். சட்டமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாக இயந்திரங்களையும் நிறுத்துவது. அரசுக்கு வரி செலுத்தாமல் மறுப்பது. கோரிக்கைகளை ஆங்கிலேயர் ஏற்கும் வரை வரிகொடா இயக்கத்தைத் தொடர வேண்டும்.
இந்த ஒத்துழையாமை இயக்கம் இந்தியா முழுவதும் மக்களிடையே பரவியது. 1922 இல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற பகுதியில் காவல்துறையின் அடக்குமுறைத் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக விவசாயிகள் போலீஸ் ஸ்டேசனை தீ வைத்துக் கொளுத்தினர். 28 போலீசார் மாண்டனர். அகிம்சை போராட்டம் வன்முறைக்குத் தாவிச் செல்வது கண்ட காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார்.
அகில இந்திய சத்தியாகிரகப் போராட்டம் ஆங்கிலேயரை நடுங்க வைத்த போராட்டம் இது. முழு சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதனை அடைந்தே தீருவோம் என்று 1929ல் காங்கிரஸ் தீர்மானமிட்டது. 1930 ஜனவரி 26 ஆம் தேதியை முழு சுதந்திர தினமாக போராட்ட வீரர்களும். தேசபக்தர்களும் கொண்டாடினர். முழு சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்று சபதமெடுத்தனர்.
உப்புக்கு வரி தா என்றனர் ஆங்கிலேயர். இயற்கை அன்னையின் அற்புதத்தால் கடல் நீரில் உருவாகும் உப்புக்கு வரியா? என்று வெகுண்டார் காந்திஜி. சாதாரண மக்கள் பயன் படுத்தும் உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து தேசமெங்கும் போராட்டம் நடத்துங்கள் என்றார்.
சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. முழுச்சுதந்திரம் பெறுவதற்கு ஆங்கிலேயரின் சட்டங்களை மீறி. உடைத் தெறிந்து போராடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க உப்புச் சத்தியாகிரகம்.
தண்டியில் காந்திஜியும். வேதாரண்யத்தில் இராஜாஜியும் மற்றும் பிற பகுதிகளில் ஆங்காங்கே உள்ள வீரர்களும் ஆங்கிலேயரின் தடையை மீறி உப்பு எடுக்க வேண்டும் என்றார் காந்திஜி.
ஆங்கிலேயர் சத்தியாகிரகிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் அதனை எதிர்க்காமல் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது உறுதிமொழி.
1930 மார்ச் 12 இல் காந்திஜி தண்டி யாத்திரையை மேற்கொண்டார். 200 மைல் நடந்து சென்று ஏப்ரல் 6 இல் தண்டியை அடைந்து கடற்கரையில் இருந்த உப்பைத் தன் கைகளினால் அள்ளினார்.
அன்று முதல் இந்தியாவெங்கும் உப்புத் தடைச் சட்டம் மக்களால் மீறப்பட்டது. தார்சானா. வாதாலா, வேதாரண்யம், ஷிரோதா. சாணகட்டா. தூத்துக்குடி. ஆறுமுகனேரி அருகேயுள்ள கீரனூர் உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளில் உப்பு எடுக்கப்பட்டது.
ஆங்கிலேயரின் போலீசார் அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். தடியடி. துப்பாக்கிச் சூடு. கைது அரங்கேறின. 1931 மார்ச்சுக்குள் பரவிய இப்போராட்டத்துடன் வரிகொடா இயக்கமும். மேலும் போராட்ட வீரர்களின் புதுப்புது யுக்திகளுடனான எதிர்ப்புகளும் போராட்டங்களாக உருவெடுத்தன. இந்தியா முழுமையும் தொண்ணூற்றி ஐயாயிரம் தேச பக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தியாவில் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இப்போராட்டத்தால் ஆங்கிலேயரின் அரசு செய்வதறியாமல் திகைத்தது.
1930 ஜனவரி 26 இல் கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 1931 மார்ச் 5 இல் காந்தி -& இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி உப்புக்கான வரி நீக்கப்பட்டது. மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய முழு உரிமை வழங்கப்பட்டது.
ஒத்துழையாமை இயக்கம் நமது தூத்துக்குடி மாவட்டத்திலும் தீவிரமடைந்தது. தூத்துக்குடி. கோவில்பட்டி. ஸ்ரீவைகுண்டம். திருச்செந்தூர் பகுதிகளில் விடுதலைப் போராட்ட வீரர்கள் போராட்டக் களத்தில் இறங்கினார். அந்த சமயத்தில் தான் தங்களது எதிர்ப்புகளை குலசேகரப்பட்டினத்தில் இயங்கிய சீனி கம்பேனியிலும், அந்த கம்பேனிக்காக இயங்கிய ரயிலும் அந்த பேராட்டம் நடந்தது.
அந்த போராட்டம் மிகவும் ருசிகரமானது.
ஆர்வத்துடன் ராணி, நூலகர் முத்துக்கிருஷ்ணனை பார்த்தாள். ஆம். அவர் தான் அறிந்திராத தியாகிகளை பற்றி ஏதோ ஒரு கதை சொல்லப்போகிறார்.
( அறியப்படாத தியாகிகளை தேடி பயணிப்போம்)


