திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 4 புதிய திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயிலான கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் பணி ஆகிய 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 68.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


