வாதலக்கரை கிராமத்தில் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி சேறும், சகதியுமாக காணப்படும் சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை, கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக முற்றிலும் தண்ணீா் தேங்கி சகதியாக மாறிவிட்டது. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சிரமம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று சேறும் சகதியமாக காணப்பட்ட சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், முறையான சாலை வசதி இல்லாததால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி இப்பகுதியில் தேங்கி கிடக்கும் சகதியால் இங்குள்ள பல குழந்தைகள் நோய் தோற்றுக்குள்ளாகி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஆகையால், இக்கிராம மக்களுக்கு உடனடி தீர்வாக சேறும், சகதியமாக காணப்படும் இங்கு தற்காலிகமாக பாதை வசதி ஏற்படுத்தி தருவதோடு விரைவில் இங்கு தரமான சிமெண்ட் அல்லது தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.