சீரான குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் மறியல்!
சாத்தான்குளம் அருகே சீரான குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 3 மாதமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையென கூறப்படுகிறது.
இதையடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி தாமரைமொழி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் இன்று காலி குடங்களுடன் தாமரைமொழி -பூச்சிக்காடு செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர்கள் குரூஸ் மைக்கேல், நெல்சன் மற்றும் வருவாய் ஆய்வாளர் இசக்கியம்மாள், தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, ஊராட்சி செயலர் ராமர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணற்றை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


