“தூத்துக்குடி மக்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்ய எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், மீனவ குடும்பங்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ரூ.19.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 11 மீனவப் பயனாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ.10,12,200/- மதிப்பீட்டில் விபத்து மற்றும் கல்வி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. 17 நாட்டுப்படகு மீனவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.9,45,000/- மானியத்தில் படகுகளுக்கான வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் (Outboard Motors) வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவக் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகையும், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானியத்தில் இயந்திரமும் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தைச் சிறப்பாகப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
தூத்துக்குடி நான் பிறந்த ஊர் மட்டுமல்லாமல் எனது சொந்த பந்தங்கள் வாழும் சொந்த மாவட்டமாகும். ஆகவே உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்ய எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்”என்றார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


