வேதாத்திரி மகரிஷி ( ஆகஸ்ட் 14, 1911 – மார்ச் 28 2006) திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமான் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்ப முதலியார், முருகம்மாள் தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.
இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார்.
18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி.


