கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் பழமையான வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் 52 வருடங்களுக்கு பின்னர் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 மாத காலமாக நடந்து வருகிறது.
கொற்கையை பொறுத்தவரை பாண்டியனின் தலைநகராக விளங்கியுள்ளது. மேலும் கொற்கையில் துறைமுகம் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வாணிப தொடர்ந்து இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக ஏராளமான பொருட்கள் கடந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று அகழாய்வு பணியில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு மற்றும் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொற்கை அருகே உள்ள மாறமங்கலம் பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் மிகவும் பழமையான செம்பு நாணயம் மற்றும் அலுமினிய நாணயம் என இரண்டு வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அலுமினிய நாணயத்தில் ஒரு பக்கத்தில் voc என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு நாணயம் செதப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தை பொறுத்தவரை இரண்டுமே டச்சுக்காரர்கள் காலத்தில் உள்ள நாணயம் என்றும் இந்த நாணயங்கள் அகழாய்வு பணியில் மேல் மட்டத்தில் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கொற்கை பகுதியில் நடந்து செல்பவர்களுக்கு கூட இது போல் நாணயம் கிடைத்துள்ளது. மேலும் கீழ் பகுதிக்கு செல்லும் போது மிகவும் பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


