கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த சுவைதர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் “தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் இந்த மாதம் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்துக்கு 530 கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன, இதில் ஒவ்வொரு ஆலயத்திலும் 500 முதல் 2,500 பேர் வரை மக்கள் கூடுவர். இந்த ஆலயங்களில் மொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆலயத்திலும் தேர்தலின்போது 3 ஆயிரம் பேர் வரை கூட வாய்ப்பு உள்ளது. தற்போது கொரானா பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் ஆலயங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் | கலந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்ததேர்தல் நடத்த அறிவித்து பணி நடந்து வருகிறது. கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. கொரோனா தடுப்புவிதிகளை முழுமையாக கடைபிடித்துதான் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று எதிர்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனா கால கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நாளில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சட்டசபை தேர்தல் சுமுகமாக நடந்ததால் திருச்சபை தேர்தல் நடத்துவதில் பிரச்சனை இருக்காது என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


