சாத்தான்குளம் அருகே கோயில் விழாவில் கிடா வெட்ட சென்ற தொழிலாளியிடம் பைக் மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சத்தான்குளம் அருகே சாலைபுதூர் நல்லூரை சேர்ந்தவர் சுயம்பு மகன் முத்துலிங்கம்(32). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பரான புத்தன்தருவையை சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் தட்டார்மடம் அருகேஉள்ள நயினார்புரத்தில் நடந்த கோயில் கொடை விழாவில் கிடா வெட்ட சென்றிருந்தாராம். அப்போது முத்துலிங்கம், தனது பைக்கை அதே பகுதியில் உள்ள உதயசிங் என்பவரது வீட்டில் நிறுத்தி இருந்தார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லையாம். பைக் சீட்டில் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தாராம். இதுகுறித்து அவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது பள்ளக்குறிச்சியை சேர்ந்த நவீன்குமார் என்பவர், பைக்கை திருடிச்செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பென்சன் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் பணத்தை திருடிச்சென்ற நவீன்குமார் என்பவரை தேடி வருகிறார்.