சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த வாலிபரின் தந்தைக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜ் என்பவரின் மகன் அருண் பரத். இவரை, மிரட்டல் தொடர்பான விசாரணைக்கு, 2006ல், சாத்தான்குளம் போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர். முன்னதாக, அருண் பரத்தை அவரது வீட்டில் எஸ்.ஐ., ஸ்ரீகுமார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையம் சென்றதும், வாகனத்தில் இருந்து இறங்கிய அருண் பரத் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அருண் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் அப்போதைய எஸ்.ஐ., ஸ்ரீகுமார் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரி, அருண் பரத்தின் தந்தை டேவிட் இன்பராஜ், மனித உரிமை ஆர்வலர்கள் ராமச்சந்திரன், ஹென்றி டிபேன் ஆகியோர், மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: அப்போதைய எஸ்.ஐ., ஸ்ரீகுமார், மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூப்பிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை, மூன்று மாதங்களில் முடித்து, இறுதி உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மற்ற ஐந்து போலீசார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால், அவர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. உயிரிழந்த அருண் பரத்தின் தந்தைக்கு, 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக, ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். இத்தொகையை, எஸ்.ஐ., ஸ்ரீகுமாரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


