தொடர்ந்து நாம் முன்னீர் பள்ளம் கிராமத்தில் உள்ள புதுக்கிராம் என்ற ஒரிடத்திற்கு செல்கிறோம். எங்களுக்கு இப்போது வழிகாட்டியாக இருந்தவர் மருதம் நகரை சேர்ந்த சரவணன். இவர் முன்னீர் பள்ளம் ஆரைக்குளம் அருகே உள்ள குருந்துடையார் சாஸ்தா கோயிலுக்கு பூசாரியாக இருப்பவர். இவரிடம் தான் எனது சித்தப்பா இராமசந்திரன் அவர்கள் மூலமாக தொடர்ப்பு கொண்டேன். அவர் எங்களை கூப்பிட்டுக்கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்றார்.
நாங்கள் இப்போது சென்ற இடம் புதுக்கிராமம்.
பெரும்பாலுமே கிராமம் என்றால் அக்கிரகாரத்தினை குறிக்கும். அல்லது புதுக்கிராமம் என்றால், வெள்ளத்தினால் பாதிக் கப்பட்டு அதன் பின் புதிய குடியிருப்பாக உருவாக்கப்பட்ட இடங்களையும் புதுக்கிராமம் என்பார்கள்.
இந்த கிராமத்தினை பொறுத் தவரை புதுக்கிராமம் என்பது வெள்ளத்தில் குடியிருப்பு மாறி கிராமமாகத்தான் இருக்க வேண்டும் என்பது புலானகிறது.
முதலில் இந்த ஊருக்கு சென்றவுடன் நம்மை வரவேற்பது ஊர் அம்மன் கோயில் தான். இந்த அம்மனுக்கு நட்டாற்று அம்மன் என்று பெயர்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏரல் அருகில் நட்டாத்தி அம்மன் என்று ஒருவர் உள்ளார். அதுபோலவே இங்கும் நட்டாற்று அம்மன் உள்ளாரே என ஆச்சரியத் தோடு கோயிலை பார்த்தோம். அங்கு இரண்டு அம்மன் மூலஸ்தானம் இருந்தது . ஒன்று பழய அம்மன். மற்றொன்று புதிய அம்மன். இந்த இரண்டு அம்மனும் ஒன்றாக இருந்து அருள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
நாட்டாற்று அம்மன் என்பது தான் நட்டாத்தி என்று ஆனது என்கிறார்கள். இவ்வூரை சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவரை சரவணன் நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் இந்த கோயிலை பற்றி நம்மிடம் பேச ஆரம்பித்தார். இந்த கோயிலில் உள்ள அம்மன் வெள்ளத்தில் சென்று இ-ழுத்துசென்று விட்டதாகவும், அதன் பின் மற்றொரு அம்மனை செய்து கோயில் கும்பாபிசேகம் பணி நடந்து கொண்டிருந்தபோது, நட்டாற்றில் பழைய அம்மன் கிடைத்தாகவும், பின்பு அம்மன் தனது இடத்தில் தன்னை பிரதிட்சை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி பழைய அம்மனை இங்கே பிரதிட்சை செய்து இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஊரில் உள்ளவர்கள் அம்மன் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அம்மன் வரலாற்றை விசாரித்த வுடன் அதை சொல்ல யோசித்தனர். எங்கள் அம்மன் எங்களுக்கு சொந்தம், ஆகவே எங்கள் அம்மனை பற்றி எழுதுகிறேன் என்று வேறு ஏதாவது எழுதி விடாதீர்கள் என வரலாறு கூற மறுத்தனர். அவர்களின் அம்மன் மீதான பற்றி நமக்கு சந்தோசத்தினை கொடுத்தது.
அம்மன் சிலையை பார்த்தேன். கருணை வடிவத்தோடு நமக்கு வேண்டிய அருள் தருகிறார். அம்மன் அருளே வடிவாக அழகாய் இருந்தாள். அவளை பார்க்க கண்கோடி வேண்டும். இந்த கோயிலில் திருவிழா நடந்து 8 வருடம் ஆகிறதாம். தொடர்ந்து கோவில் வேலை நடந்துகொண்டே இருக்கிறது என்பதாலும், மேலும் 2 வருடத்தில் இங்கு திருப்பணி வேலை நடந்து முடியும். அப்போது கோயில் திருவிழா தொடர்ந்து நடைபெறும் என ஊர்மக்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் மேலும் கூறும்போது, எங்கள் ஊரில் 150 வரிகள் மட்டுமே உள்ளது. அம்மன் வடக்கு நோக்கி உள்ளார். அவர் எங்கள் ஊரை காக்கும் தெய்வம். அவளுக்கு பின்னால் தான் எங்கள் ஊரே உள்ளது. எங்கள் ஊரில் 250 ஓட்டு உள்ளது. ஊரில் சுமார் 80 வீடுகள் தான் இருக்கிறது. ஒரே வீட்டில் 2,3 வரி தாரரும் இருக்கிறர்கள். கல்யாணம் முடிந்தவர்களுக்கு வரி. 18 வயது தாண்டியவர்களுக்கு அரை வரி. என இந்த ஊரில் வரி பிரிக்கிறார்கள். அதைக்கொண்டு ஆண்டு தோறும் பூஜைகள் நடைபெறுகிறது என்றார்கள்.
இங்கு அதிகமாக தேவர் சமுதாயத்தினை சார்ந்த மக்களே வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் விவசாயத்தினை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல் லாமல் சிலர் வெளியூரில் வேலை பார்த்தாலும் கூட கோயில் திருவிழா என்றால் உடனே ஊருக்கு வந்து விடுவார்கள்.
ஊரில் பல பேருக்கு நட்டாத்தி அம்மன் பெயர் உள்ளது. நட்டார். நட்டாத்தி என பலர் இங்கு உள்ளனர். இந்த ஊரில் அக்னீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.
ஒரு காலத்தில் இந்த கோயில் மிகப் பிரமாண்டாக இருந்து இருக்கவேண்டும். தற்போது இந்த கோயில் மிகவும் சிறிய கோயிலாகத் தான் உள்ளது. ஆனால் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலாக இந்த கோயில் உள்ளது. ஒருகாலத்தில் இந்த கோயில் அந்தணர்களால் பராமரிக்க பட்டிருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இங்கு ஆறு கால பூஜை நடந்து இருக்கிறது. பிற்காலத்தில் இங்கு வாழ்ந்த பிராமணர்கள் வெளியூர் கிளம்பவே உள்ளூரில் காவல் காரர்களாக இருந்தவர்கள் இந்த கோயிலை பராமரிக்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் இந்த கோயில் பூஜைகள் இன்றி கஷ்டப்பட்டது.
ஆனால் தற்போது சிவ பக்தர்கள் இந்த கோயிலை பராமரித்து வருகின்றனர்.
இந்த கோயிலில் லிங்கம் மிக பிரமாண்டமாக உள்ளது. முருகர் சிலை முன்புறம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் முன்புறம் நிறைய உடைந்த சிலைகள் உள்ளது.
பிற்காலத்தில் இந்த கோயிலை பெரிதாக கட்டி மக்கள் தரிசனத் துக்கு கொண்டு வர வேண்டும் என இங்குள்ள பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஊருக்குள் செல்லும் இடத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த ஊர் முன்னீர்பள்ளம் ஊராட்சிக்கு சொந்தமான ஊராக உள்ளது.
பாளையங்கால்வாய் பாசனத்துக்கு உள்பட்ட இந்த ஊர் ஒருப்பக்கம் தாமிரபரணி தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடும் வகையில் புதுக்கிராமத்தினை சுற்றி வயல் வெளிகள் பச்சை பசேல்லென்று விளைந்து சில மாதம் காணப்பட்டால், சில மாதம் மஞ்சள் நிறத்திலும் கண்கொள்ளா காட்சியாக காட்சியளிக்கிறது. ஆனால் நான் முதல் முதலில் முன்னீர் பள்ளம் வந்த போது இந்த இடத்தில் உள்ள வயல்வெளிகள் எல்லாம் காய்ந்து போய் கிடந்தது. இது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால் இப்போது அறுவடை நடந்துகொண்டிருக்கிருந்தது.
அடுத்து நம்மை சரவணன் மருதம் நகருக்கு கூட்டி வந்தார். இந்த ஊர் முழுக்க விவசாய மக்கள் வாழும் இடம். பெரும்பாலுமே ஐவகை நிலங்களில் மருத நிலம் என்பதும் வயலும் வயல் சார்ந்த இடமாகும். இந்த ஊரில் வயல்வெளிகள் அடர்ந்து காணப்படுவதால் இவ்வூருக்கு மருதம் நகர் என பெயர் வந்து இருக்க வேண்டும். சரவணன் எங்களை இந்த ஊருக்கு அழைத்து வரும் போதே அங்கு விவசாய குடி மக்கள் நெல்லை அம்பராமாக குவித்து வைத்திருந்தார்கள். அம்மன் கோயிலை சுற்றி களத்து மேட்டில் மூட்டை மூட்டையாக நெல்லை மூடையை அடுக்கி வைத்திருந்தார்கள். பொன் விளையும் பூமியாகவே இந்த பகுதி இருக்கிறது.
இவ்வூரில் வீரபாண்டி செல்லாயி அம்மன் தான் அருட்பாலிக்கிறார். முன்னீர் பள்ளம் ஊரில் நாம் பார்த்த அம்மன் கோயில் அம்மனை தான் இந்த பகுதியில் தேவேந்திர குல மக்கள் தரிசித்து வருகிறார்கள். இந்த கோயில் சுடலைமாடன் ஊருக்குள் மிகப்பிரமாண்டமாக இருக்கிறார். பெரும்பாலுமே ஊர் எல்லையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சுடலை மாடன் ஊருக்கு நடுவில் உள்ளார். அதுபோலவே வண்டி மறிச்சி வண்டி மலையான் கோயிலும் இந்த கோயில் வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக உள்ளார். பல இடங்களில் படுத்த நிலையில் தான் இந்த சுவாமி இருப்பார். ஆனால் இங்கு அமர்ந்த நிலையில் வண்டி மலையான், வண்டி மலைச்சி ஆகியோர் உள்ளனர்.
இதில் மற்றுமொரு விசயம் இந்த ஊருக்கு இந்த ஆலயங்கள் வந்த வரலாறு மிகவும் ருசிகரமானது . அந்த வரலாற்றை குறித்து நாம் காணலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)