தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தூத்துக்குடியில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாகவும், ஒரு மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் மாயமாகி உள்ளதாகவும் செல்லப்பிராணி ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் நாட்டுப் பூனைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மீன் விற்பனை மையங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் கிடைக்கும் மீன் கழிவுகளைத் தின்று வளரும் பூனைகள், பொமரேனியன் நாய்க்குட்டிகளின் அளவிற்குப் பெருத்து கொழுத்து காணப்படுகின்றன. முன்னதாக இத்தகைய பூனைகள் பெருக்கத்திற்காக இலங்கைக்குக் கடத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
தற்போது தூத்துக்குடியில் உள்ள பூபாலராயர்புரம், திரேஸ்புரம், சங்குக்குளி காலனி, குரூஸ்புரம், இன்னாசியார்புரம், மேட்டுப்பட்டி, விவேகானந்தர் நகர், கிருஷ்ணராஜபுரம், சுந்தரவேல்புரம் ஆகிய பகுதிகளில் பூனைகள் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் அடங்கிய கும்பல், வீட்டின் சுவர்களில் ஏறிக்குதித்தும், கயிற்றில் கட்டப்பட்ட சிறிய ஈட்டிகளைத் தூரத்திலிருந்து பூனைகள் மீது வீசிக் காயப்படுத்தி இழுத்தும் சாக்குப்பைகளில் அடைத்துக் கடத்திச் செல்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தூத்துக்குடியில் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் இறைச்சிக்காகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகச் செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இவை பிரபல அசைவ உணவகங்களில் ‘முயல் கறி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதற்காகக் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தகவல்கள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமார் என்பவர் கூறுகையில், “எங்கள் வீட்டில் குழந்தைகள் போலக் கொழு கொழுவென வளர்த்து வந்த 4 பூனைகளை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சுவர் ஏறிக்குதித்து ஈட்டி வீசி பிடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளைப் போலீசாரிடம் வழங்கிப் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செல்லப்பிராணி வளர்ப்போர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பூனை கடத்தல் கும்பலை காவல்துறையினர் உடனடியாக மடக்கிப் பிடித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


