முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் மாரடைப்பால் ராஜத்துரை இறந்துபோகிறார். அவர் மகன் வெள்ளத்துரைக்கு சொந்த காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள்.
வெள்ளத்துரை தனது தந்தையை இந்த கதிக்கு ஆளாக்கிய சிவராமன் அய்யரை பலிவாங்க தேடிப்போகிறான். அங்கு அழகான பெண் ஒருவளை சந்திக்கிறான்.
இனி.
67. வெள்ளத்துரையை கலங்க வைத்த அக்ரகாரம்.
“எவன் இந்த டீயை இந்த ஊருக்கு அறிமுக படுத்தினானோ. தெரியலை. ஆனா என்னை மாதிரி நிறைய பேரு டீக்கு பையித்தியம் ஆகிட்டாவடே”. சிரித்தார் அகஸ்தீஸ்வரன். ஆனால் ரசிக்கும் மன நிலையில் தான் சந்திரன் இல்லை.
“நான் மட்டும் என்ன அதுக்கு விதி விலக்கா?”
மீண்டும் சிரித்தார். “டீ மட்டும் குடிப்பும்டே. அப்படியே நடந்து போகும் போதே உன் அப்பா கதையைசொல்லுதேன். கவலைப்படாதே” மீண்டும் சிரித்தார்.
சந்தோசத்துடன் எழுந்தான் சந்திரன். காரை ஸ்ராட் செய்தான். முன் பக்கத்தில் சாரை ஏற்றிக்கொண்டான்.
“கிளாரிந்தாவோட கணவர் இருக்கும் இடம் தெரியாம போயிட்டார். ஆனால் இன்னைக்கு கிளாரிந்தா சாதிச்சிட்டா. வருடம் 150 யை தாண்டிட்டு, இன்னைக்கும் அந்த அம்மா பெயரை சொல்லிக்கிட்டு, நிறைய பேரு வந்து கிட்டே இருக்காவ”.
கிளாரிந்தா தாக்கம் அகஸ்தீஸ்வரன் சாருக்கு மிக அதிகமாக இருந்தது.
“ஆனா அவளுக்கு பிற்காலத்தில ஆங்கிலேய அரசு உதவி கிடைச்சுது. ஆனா நமக்கு கிடைக்குமா? ஆனாலும் உன்னோட அப்பா கதை வித்தியாசமானதுடே. எதிர்பாராம நடந்தது. ஆனால் அவர் வாழ்க்கை பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வித்தியாசமான காதல் கதை. ஆனா இந்த ஊருல இந்த சாதிக்கார பயவிய அந்த கதையை தான் இப்போது சொல்லப்போகிறேன்”.
கார் கிளம்பியது. சந்திரனின் தந்தை வெள்ளத் துரையின் கதை¬யும் அகஸ்தீஸ்வரன் மூலம் விரிய ஆரம்பித்தது.
அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான் வெள்ளத்துரை.
செல்லையா வந்தார். “என்னய்யா வெள்ளத்துரை இங்க நிக்கிய. இருட்ட போவுது. ஊருக்கு போவும் வாங்கய்யா”.
அமைதியா இருந்தான்.
“என்னய்யா இப்படி பரபக்க பரக்க முழிக்கிய. என்னன்ன எங்கிட்ட சொல்லுங்கய்யா”.
“அய்யா. நான் சொல்லுதேன்னு தப்பா நினைக்காதீய. எங்கப்பா எங்க உறவு காரங்களை விட்டு போவ காரணம் இந்த அய்யர்தானே. இப்போ அந்த அய்யர் எங்க இருக்காரு. எப்படி இருக்காரு”. கோபமாக கேட்டான்.
சிரித்தார் செல்லையா. “இங்க பாருங்கய்யா உப்பத்தின்னவன் தண்ணி குடிக்கணும். அதுதான் நியதி. அது மேல்சாதி, கீழ்ச்சாதின்னு கிடையாது. யாரு தப்பு பண்ணினாலும் ஆண்டவன் கிட்ட ஒண்ணுத்தான்”.
நிமிர்ந்தான் வெள்ளத்துரை.
“ஆமாமுய்யா . இப்போ ரெண்டு கண்ணும் தெரியாம அக்ரகாரத்தில வீட்டுக்குள்ள முடங்கி கிடக்காரு அந்த அய்யரு. கடவுள் அவருக்கு நல்ல தண்டனையை கொடுத்து புட்டாரு. நீங்க அதை ஏன் கேக்கிய. அவுகளை பத்தி நீங்க ஒண்ணும் நினைக்காதீக”.
அமைதியாக இருந்த வெள்ளத்துரையின் கண்கள் சிவந்தது. மறைய துடிக்கும் சூரியன் சில வேளைகளில் இப்படித்தான் சிவந்து நிற்கும் . அதுபோலவே இவனது கண்களும் சிவந்து நின்றது.
“இங்க பாருங்கய்யா. உங்க அய்யா நல்லதுக்குத்தான் வாழ்ந்தாவ. அவுக காலத்தில நல்லதை செஞ்சாவ அதனாலத்தான் நல்ல சாக்காலம் கிடைச்சது. ஊர் உலகத்தில வம்பு பண்ணினா. அய்யரை மாரி வீட்டுக்குள்ள கிடந்து நஞ்சி நகண்டுத்தான் சாவணும். மனுசன் நிம்மதியா இருப்பானாக்கும். அவன் பண்ணின தப்பு அப்படி. வயசுக்கு வந்த பொண்ணு பாலச்சுளை மாரி இருக்கு. அந்த பிள்ளையை நல்லபடியா திருமணம் முடிச்சி கொடுக்க வக்கில்லை. வீட்டுக்குள்ள முடங்கி கிடக்காரு. மனுசன்”.
மனதுக்குள் நொந்து போனான். “தனது தாத்தா இப்படி ஊரை விட்டு ஒட அவர் போட்ட பொய் வழக்கு தானே காரணம். அவர் கஷ்டப்படுறதை நம்ம இரண்டு கண்ணால பாக்கணும். இன்னைக்கு ராத்திரி யாருக்கும் தெரியாம கிராமத்துக்குள்ள போணும். அவர் படுத்த பாட்டை பாக்கணும்”.
முடிவு செய்தான். ஆனால் சுப்பையா சொல்லுவதை தட்டவும் முடியவில்லை. எனவே சுப்பையா பின்னாலேயே வீட்டுக்கு வந்தான். இரவு சாப்பிட்டான். சுப்பையா தூங்க ஆரம்பித்தார். வீட்டுக்கு வெளியே ஒரு நார் கட்டிலில் படுத்து போர்வையை போர்த்திக் கொண்டான். ஆனால் அவனுக்கு தூக்கம் வரவில்லை.
நடுராத்திரியில் எழுந்த நடக்க ஆரம்பித்தான். ஆற்றுக்கு அந்த கரையில் தான் கிராமம் இருந்தது. இரவு பௌர்ணமி வெளிச்சத்தில் கிராமத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பௌர்ணமி வெளிச்சம் தாமிரபரணி தண்ணீரில் பட்டு பல்வேறு வண்ணங்களை சிதறடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் குருவிகள் சத்தம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிகொண்டிருந்தது. நேரம் செல்ல செல்ல எங்கிருந்தோ ஆந்தை மட்டும் கத்திக்கொண்டிருந்தது. அந்த கத்தல் கொலை வெறிபோல இருந்தது.
வேகமாக வந்த மேக கூட்டம் பௌர்ணமி நிலவை மறைத்து அதன் பின் உடனே விலகி சென்றது. இவனுக்கு இந்த பாதை ஒன்றும் மோசமாக தெரியவில்லை. எதிர்பார்ப்போடு இறங்கி நடைபோட்டான்.
தூரத்தில் இருந்த மண்சாலை அந்த கிராமத்தினை காட்டியது.
ஒரு காலத்தில் பொன் விளையும் பூமியாக இருந்த அக்கிரகாரம். தற்போது ஒருசில வீட்டில் மட்டுமே ஆள்கள் இருந்தன. மற்ற வீடுகள் பூட்டிக்கிடந்தது. பிராமணர்களின் அதிகாரம் தாண்டவமாடிய இடம். தற்போது புல்புதர் செடி முளைத்து கிடக்கிறது. எப்போதும் பஜனை பாடல்களும், அக்ரகார மொழிகளும் தெரு அதிர இருந்த இடம் தற்போது நாய்கள் ஊழையிடும் தெருவாக மாறியிருந்தது.
வெள்ளத்துரைக்கு இந்த தெருவை பற்றி தெரிய வாய்ப்பில்லை. இவரது தந்தை காலத்தில் இந்த இடத்தில்தான் அடாவாடி அதிகமாக இருக்கும். சிவராமன் அய்யர் இட்ட கட்டளைக்கு வேலை செய்ய எத்தனையோ பேர் காத்து கிடந்தனர். ஆனால் மற்றவர்கள் உள்ளே நுழைய முடியாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடாக இருந்த இடம். அய்யருக்கு வேண்டப்பட்டவர்கள் கூட மேலே சட்டை போட்டு உள்ளே நுழைய முடியாது. செருப்பை கழற்று கக்கத்தில் வைத்துக்கொண்டுத்தான் கடக்க வேண்டும். அதிலும் சாணர்கள் என்றால் தெருக்குள் நுழையவே முடியாது. எல்லோருக்கும் தொட்டால் தான் தீட்டு, ஆனால் நாடார்களை பிராமணர்கள் பார்த்தாலே தீட்டு. ஆனால் காலங்கள் மாறி விட்டது.
தற்போது இந்த அக்ரகாரத்துக்குள் யார் வேண்டும் என்றாலும் எப்போதும் நுழையலாம் என்பது போல ஆகி விட்டது. கிட்டத்தட்ட 25 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டு விட்டது.
சில வீடுகளில் மொட்டை பிரமாணத்தி இருப்பார்கள். மொட்டை பிராமணத்தி என கிராமத்தில் பேசப்படும் இவர்கள் கணவனை இழந்த கைபெண்கள். இவர்கள் ஆத்துக்கு குளிக்க வந்தால் கூட , யாரும் எதிரே வர இயலாது. அவர்களை பார்த்தவுடன் ஒதுங்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் தீட்டு. தீட்டு செய்த நம்மை தூக்கி கொண்டு உதைக்க அடியாள்கள் வந்து விடுவார்கள். எனவே மொட்டை பிரமாணத்திகள் வந்தால் நம்மவர்கள் வயற் காட்டுக்குள் இறங்கிவிடுவார்கள்.
ஆனால் காலங்கள் கடந்த போது அந்த பிரமாணத்திகளை பார்த்து யாரும் ஒதுங்குவது கிடையாது. திமிருடன் எல்லோரும் எதிராக செல்வார்கள். எனவே எதிரே யாரும் வந்தால் அந்த மொட்ட பிரமாணத்திகளே பாதையை விட்டு இறங்கி ஒரு ஒரமாக போய் நின்று கொள்வார்கள் . பாவம் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர்கள். தற்போது தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அந்த அளவுக்கு தீண்டாமை வெகுண்டு எழுந்த இடம் தற்போது மாறியிருக்கிறது. இதுதான் கால மாற்றம் என்பது போல. ராஜதுரையின் கால கட்டத்தில் அவர்களை எதிர்த்து பேச முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையே மாறி விட்டது.
ஆம். கொடி கட்டி பறந்த அய்யர்கள் எல்லாம் தங்கள் வயல்களை காவல்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு அருகில் உள்ள பட்டணத்திலும் சென்னை மற்றும் வெளிநாடுகளில் போய் பெரிய பொறுப்பில் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்களை பொறுத்தவரை கோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்.
ஊரில் இருப்பவர்கள் இவர்கள் மட்டுமே. இவர்களும் தற்போது வசதியில் பின்தங்கி விட்டார்கள். சிவராமன் அய்யர் போன்றவர்கள் குடும்பத்தோடு இங்கே தங்கினாலும் பழைய மரியாதை இல்லை. சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு கூட குத்தகை பணம் பிரிவதில்லை. குத்தகைதாரர்களிடம் கேட்டால், அவர்கள் இவர்களை மதிப்பதே இல்லை. வேறு வழியில்லாமல் வெளியே சொல்லவும் முடியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இங்குள்ள பிராமணர்கள் வாழ்ந்த காலம் அது. மேலும் கிராமத்து பெண்களை பிராமணர்கள் கட்ட தயங்கிய காலம். எனவே சிவராமன் அய்யர் பெண்ணை வெளிஇடத்துக்கு சென்ற பிராமணர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அந்த பெண்ணும் வயதான கண்தெரியாத தனது தந்தையை பராமரிக்க வேண்டும் என இவர்கள் உடனே இருந்துவிட்டாள். இவர் கொஞ்சம் படித்திருந்தாள். இவளும் வெளிநாட்டில் போய் பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டு பெரிய ஆளாக மாறியிருப்பாள். ஆனால் சிவராமன் செய்த அட்டூழியத்துக்கு தற்போது இவள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த வேளையில் தான் தனது தந்தையை இந்த கதிக்கு ஆளாக்கிய சிவராம அய்யரை பார்க்க நடுராத்திரியில் கிளம்பி வந்திருக்கிறான் வெள்ளத்துரை.
ஆனால் விதியோ வேறுமாதிரி வேலையை அங்கே செய்து கொண்டிருந்தது.
வீட்டின் முன்பு போய் நின்றான். கதவை தட்ட வேண்டும் என நினைத்தான். ஆனால் நமது குடும்பத்தினை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவனை நேர் வழியில் போய் ஏன் பேசவேண்டும். குறுக்கு வழியில் போய் கேட்போம் என முடிவுக்கு வந்தான்.
வீட்டின் கூரை வழியாக இறங்கி போய் அந்த கிழவனிடம் நாலு கேள்வி கேட்ட வேண்டும் என்று நினைத்தான் வெள்ளத்துரை.
பாவம் வீட்டுக்கூரை வழியாக இறங்கினால் அது திருட்டு குற்றமாகி விடுமே என்ற பயம் கூட அவன் மனதில் இல்லை. ஆனால் ஒரு முடிவுடன் அருகில் உள்ள சுவர் வழியாக ஏற முயற்சி செய்தான். இரண்டு முறை வழுக்கியது. அதன் பின் அருகில் மிகப்பெரிய கல் இருந்தது. அதை உருட்டிக்கொண்டு வந்து சன்னல் ஒரம் போட்டான்.
அதன் பின் சன்னலை பிடித்து ஏறி மாடிக்கு ஒரே தாவாக தாவினான்.
அந்த வீட்டின் மாடியில் சென்ற போது, வெள்ளை யடித்து பல ஆண்டுகள் ஆனாது போல பழமையாக இருந்தது. அருகில் ஒரு புகைப்போக்கி இருந்தது. இந்த வழியாக அடுப்பங்கரையில் இறங்க ஆயத்தமானன். புகைப்போக்கி என்றவுடன் இந்த காலத்தினை போல் ஏதோ குழாய் என நினைத்துக்கொள்ளாதீர்கள். அது ஒரு அறை போலவே இருக்கும். கிட்டத்தட்ட 3க்கு 3 சைஸ் அளவில் அந்த கட்டிடத்தில் புகை போக்க ஒட்டை அமைத்து வைத்திருப்பார்கள். அதில் மேலே ஒரு கூரை அமைத்து இருப்பார்கள். அந்த கூரையை திறந்தால் அடுப்பங்கரையில் இறங்கி விடலாம்.
அதன் வழியே உள்ளே இறங்கி அடுப்பங்கரையில் குதித்தான்.
அடுபங்கரையில் வெற்றுப்பாத்திரங்களும், அடுப்பும் மட்டுமே இருந்தது. இவன் இறங்கியவுடன் பாத்திரங்கள் இவன் கால்பட்டு படபடவென்று விழுந்தது.
“என்ன டி அங்க சத்தம் கேட்கிறதே”. அய்யர் கத்தினார்.
“ஒண்ணுமில்லேண்ணா . ஏதோ பூனை உருட்டுகிறது. நீங்க படுங்கண்ணா” என்றாள் அய்யரின் மனைவி.
“பாவம் பூனைக்கு நாம படுத பாடு எங்கேடி தெரிய போவுது. அடுப்பங்கரையில என்ன இருக்கிறதுன்னு உருட்டுதோ தெரியலை”. பெரும்மூச்சி விட்டார். “அன்னம் சமைச்சு வாரம் கணக்காகுதுன்னு அதுக்கெங்கடி தெரியும்” பதில் எதுவும் இல்லை.
அனைவரும் அமைதியாக படுத்திருந்தனர்.
நடு மத்தியில் கூரை இடுக்கு வழியாக நிலவொளி உள்ளே விழுந்தது. அங்குதான் அந்த சிற்பத்தினை பார்க்கிறான்.
ஆகா. இது என்ன அஜந்தா ஓவியமோ? நடுவில் நிலா வெளிச்சத்தில் பளிச்சென இருக்கும். இந்தபெண் யார். சுப்பையா சொன்னாரே, இவள் அய்யரின் மகளாக இருக்குமோ? அவன் மனதில் எதிர்பாராத விதமாக ஒரு மின்னல் அடித்தது.
அவளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது. இப்போது பழி வாங்கும் படலம் எல்லாம் மண்ணோடு மண்ணாகி போய் விட்டது. அய்யரை பார்க்க மனம் வரவில்லை. இந்த பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.
“சே. சொந்த ஊரில் சொந்த காரர்களே பெண் தர மாட்டேன் கிறார்கள். அப்படி இருக்கும். போது வேறு சாதி. அதுவும் உயர்ந்த சாதி . இந்த சாதி பெண்ணை நமக்கு எப்படி தருவார்கள். அதுவும் இந்த இரண்டு சாதிக்கும் ஓட்டவே ஒட்டாது. தனது தந்தை சொல்லியிருக்கிறார்”.
தனது தந்தை சொன்ன கதை அவன் மனதில் விரிந்தது.
ஒரு சமயம் பனை ஏறும் தொழிலாளி ஒருவன் பனை ஏறிக்கொண்டிருந்திருக்கிறான். அவனை பிராமண பெண் ஒருத்தி தனது வீட்டு முன் வரண்டாவில் நின்று பார்த்துவிட்டாள். பனை ஏறியின் திரண்ட தோள். அவன் பனை ஏறும் அழகு. அவன் தனது வேர்வையை ஒரு கையால் துடைத்து விட்டு மிக நேர்த்தியாக பனை ஏறும் தன்மை. அவன் வேஷ்டி கட்டியிருக்கும் அழகு. நெஞ்சில் இருக்கும் சிராய் புகுந்த காய்ப்பு. முறுக்கிய மீசை. அவனை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. அவன் பனையில் இருந்து இறங்கி முறுக்குதட்டியை தூக்கிதோளில் வைத்துக்கொண்டு, தார் நாரை தலையில் கிரிடம் போல சூட்டிக்கொண்டு நடந்து வரும் அந்த ஒய்யாரக்காட்சி. அவளை அப்படியே கவர்ந்தது. காலங்கள் கடந்தது. ஒரு நாள் அந்த பெண் கர்ப்பிணி யானாள். கர்ப்பத்துக்கு காரணம் யார் என்றால் இந்த பனையேறித்தான் என்றார்கள். அது எப்படி புரியாத புதிர்தான். பனையேறி எங்கோ இருக்கிறான். இந்த பருவ பெண்ணை தொடவும் இல்லை. இவரும் ஒருவரை ஒருவர் பார்த்த மனம் விட்டு பேசவும் இல்லை. ஆனால் இரு மனதும் ஒன்றாகி இருக்கிறது. கனவில் இணைந்து இருக்கிறார்கள். இன்று அவள் கர்ப்பிணி ஆகி விட்டாள். அந்த அளவுக்கு பனையேறி பார்த்தாளே தீட்டு என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.
அன்று முதல் பிராமணர்கள் மற்றவர்கள் தொட்டால் தான் தீட்டு, நாடார்கள் பார்த்தாலே தீட்டு என ஒதுக்கி வைத்து விட்டார்கள் என கதை கதையாக சொல்லுவார். ஆனால் பாவப்பட்ட மனிதர் தனது தாய் இங்கிலிஷ்காரி மாதிரி இருக்காளே அது ஏன் அப்பா என்று கேட்டால் மூச்சி விடமாட்டார்.
அட அதுதான் போகுது, நம்ம அம்மா மாதிரி என்னை கொஞ்சம் சிவப்பாக பெத்து இருக்காலாம். ஆனா கருகருவென ஒரிசினல் பனைஏறி மாதிரியே கருப்பட்டி கலரில் பெத்து போயிட்டு போயிட்டார்.
பாவம் அந்த இருட்டுக்குள் செக்கச்செவலேன்று பார்த்த அய்யர் மகளை பார்த்தவுடன் இவன் கலர் பத்தியெல்லாம் இவனுக்கு நினைவுக்கு வருகிறது. அதுவும் இவன் என்ன அவளை கல்யாணமா செய்யப்போகிறான். அட அப்படியே இவன் பெண் கேட்டால் அய்யர், கொண்டு போ என தாம்பூல முடித்தா கொடுக்கப்போகிறார்.
பல குழப்பம். ஆனால் ஆடாமல் அசையாமல் அவளை ரசிக்க வேண்டும் என்று தோன்றியது.
“ஏடே உங்க இனம் பார்த்தாலே தீட்டு என ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். நீ பார்க்கிற பார்வை. அவளை புள்ளத்தாச்சியாக்கி புடாதேடா” என மனசாட்சி ஒருபக்கம் உறுத்தியது.
இந்த மனச்சாட்சிக்கு வேறு வேலை கிடையாது. இது வேறே அடிக்கடி மனதுக்குள் வந்து ஏதாவது செய்து கொண்டே இருக்கும்.
அந்த பெண்ணுக்கு தூக்கத்திலும் ஒரு உணர்வு ஏற்பட்டது. எந்த பெண்ணுக்கும் ஏற்படுவதுதானே. அவளுக்கு எவரோ ஒருவர் தன்னை பார்ப்பது போலவே தோன்றியது.
எனவே சட் என எழுந்து விட்டாள்.
அக்கம் பக்கம் பார்த்தாள். அவள் கண் அங்கே இங்கே தாவி சரியாக இவன் இருந்த இடம் பக்கம் வந்தது.
யாரோ இருப்பது போல உணர்ந்தாள்.
“யாருது. அடுப்பங்கரையில யாரது”. குரல் கொடுத்தாள். வெண்கல உருளியில் உருண்டு செல்வது போலவே ஒரு சத்தம் கேட்டது.
“பூனை உருட்டுதுடி . ஒண்ணுமில்லைய். படுத்து தூங்குடி”. அய்யரின் மனைவி சத்தம் கொடுத்தாள்.
“இல்லைய். ஏதோ இருக்குது. எனக்கு பயமா இருக்குது”.
“மனப்பிரமை. சும்மா தூங்கு”.
“இல்லைய். ஏதோ இருக்கு”.
“ஏணுங்கண்ணா. கள்ளன் யாரும் புகுந்து இருப்பானோ”. மகளின் சந்தேகத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் தன் கணவரை நோக்கி கேட்டாள்.
“சும்மா தூங்குடி. கொப்பரை கொப்பரையா தங்க நகை வச்சிருக்கோம். இங்க கொள்ளை போட கள்ளன் வாறான்”.
படுத்து தூங்க ஆரம்பித்தார் அய்யர். அவர் மனைவியும் தூங்க ஆரம்பித்து விட்டார். எங்கே தூங்க முடியும். இருவரும் சாப்பிட்டு பல நாள் ஆகி விட்டது. பசி அவர்களை வாட்டியது. ஆனாலும் இறைவன் அவர்களுக்கு தூக்கத்தினை சிறிது நேரத்தில் வாரி வழங்கி விட்டான். அதுவரை தூங்காமல் இருந்தவர்களுக்கு தீடீர் தூக்கம் வந்தது ஆச்சரியத்தில் ஆச்சரியம் தான்.
10 நிமிடத்தில் இருவரும் குறட்டை விட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் பூமாவுக்கு தூக்கம் வரவில்லை.
பூமா. அய்யரின் மகள். 21 வயதே நிரம்பியவள். பிராமணர்களுக்கே உரிய வண்ணம். மொட்டு போன்ற இதழ். தாமரைக்கண்ணுக்கு கண் மையிட்டிருந்தாள். கழுத்தில் கறும்பாசி, நீண்ட கழுத்துக்கு ஏற்ற மாதிரியே இருந்தது. அவள் படுத்திருந்த படுக்கை சிறு கட்டில். அழகிய வேலைபாடு இருந்தது. அந்த அழகை விட இவள் கொள்ளை அழகாய் இருந்தாள். அஜந்தா ஓவியத்தினை இவன் பார்க்க வில்லை. அதனால் இவள்தான் அஜந்தா ஓவியமோ என வியந்தான். தென்றலை உவமை சொல்லவா? இல்லை வியக்கவைக்கும் மலைப்பை ஏற்படுத்தும் இவள் உடல் வனப்பை ரம்பைக்கும், ஊர்வசிக்கும் இணையாக சொல்லவா? ஆகா. இருட்டுக்குள் இருந்து கொண்டு இந்த கருப்பனுக்கு இதெல்லாம் தேவையா? “ஏலேய் சொந்த பொண்ணு தேனிலாவை உனக்கு டாட்டா காட்டி விட்டாள். நீ இங்கு வந்து எட்டா கனிக்கு ஆசைப்படுகிறாய். நீ வந்த வேலை என்ன? உன் அப்பாவை இந்த கதிக்கு ஆளாக்கிய அய்யரை நாலு கேள்வி நாக்கை பிடுங்கிற மாதிரி கேக்க வேண்டும் என்று நினைத்தாய். ஆனால் இங்கு வந்து அவர் பெண்ணை நீ காதலிக்கிறாய். அறிவு கெட்டவனே. உன் எதிரி மகளை ரசித்துக்கொண்டிருக்கிறாய். என்னமோ அவளை தான் திருமணம் முடிக்க போவது போல் நடு இருட்டில் அமாவாசை போல இருக்கும் நீ கற்பனை பண்ணிக்கொண்டு இருக்கிறாய். தேவையாடா உனக்கு. முதலில் இடத்தை காலி பண்ணு. இந்த வீட்டுக்குள் நடுராத்திரியில் நுழைந்தது தப்புடா மடையா?. மாட்டிக்கிட்ட பிழிந்து விடுவார்கள்.”
மனசாட்சி அவனை விடாமல் விரட்டியது.
“உன் அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் கலப்பு திருமணம் முடித்தாலும் உன்னை நேர்வழியில்தான் வளர்த்து இருக்கிறார்கள். குறுக்கு வழியில் நீ செல்ல கூடாது என்பதில் உன் தகப்பன் சரியாக உன்னை வளர்த்து இருக்கிறான். எங்கு சென்றாலும் உழைத்து வாழ உனக்கு சொல்லித் தந்திருக்கிறான். உனக்கு ஏன் இருட்டில் படுத்துக்கிடக்கும் பருவ மலர் மீது ஆசை. சேய். உன் இனத்துக்கே இது ஆகாதுடா?”.
யாரோ சவுக்கால் அடிப்பது போல இருந்தது.
“நம்பி இவர்களோடு செல்லலாம், இவர்கள் எதை விற்றாலும் நம்பி வாங்கலாம் என பெயர் வாங்கிய வம்சமுடா உன் வம்சம். உனக்கு இந்த குறுக்கு புத்தி வேண்டாம். ஓழிஞ்சி போ. தெரிஞ்சோ தெரியாமலேயோ வீட்டுக்குள் திருடன் போல வந்துட்டே. அப்படியே போயிடு. நீ வந்த சுவடு இங்கே யாருக்கும் தெரியவில்லை. அப்படியே ஓடிப்போய் தாமிரபரணி ஆற்றில் ஒரு குளி போட்டு விட்டு, கயித்து கட்டிலில் போய் தூங்கு. உன் நிறத்துக்கு, உன் அழகுக்கு எங்கோ ஒரு கருப்பாயியோ. கருவாச்சியோ பிறந்து இருப்பா. அவளை கட்டிக்கிட்டு கருத்த குட்டியா பத்து பிள்ளைய பெத்து போடு. பௌர்ணமிக்கு ஆசைப்படாத அமாவாசை. உனக்கு கிடைக்காது”.
சேய் இன்னைக்கு பாத்து இந்த மனசாட்சி நிறைய பேசுதே. என்ன செய்ய . அது சொல்றதும் உண்மைத்தானே. இந்த இருட்டுக்குள்ள நாம இருக்கோம். மத்தவங்க பக்கத்தில தான் இருக்காங்க. நம்மல கண்டு பிடிக்க முடியலையே. ஒரு வேளைக்கு அது சரித்தான். நம்ம கலர் இந்த மாதிரி விசயத்துக்கு நல்லா ஒத்துத்தான் போகுது. இருந்தாலும் இந்த கலரில் இருக்கும் நமக்கு இந்த பெண் கூட டூயட் ஆட்டமெல்லாம் எதுக்கு.
சரி வந்த வழியே போய் விடுவோம். மீண்டும் அடுப்பங்கரைக்கு மெதுவாக போனான். அங்கிருந்து மெதுவாக புகைப்போக்கி வழியாக மேலே ஏறினான். அந்த மச்சியில் ஏறும் போதே. இவன் சட்டை எல்லாம் கரியாகி இருந்தது. மூஞ்சியிலும் நன்றாக கரி பூசியிருந்தது. கஷ்டப்பட்டு மேலே ஏறினான். அதன் பின் அங்கிருந்து மச்சிக்குள் குதித்தான்.
எதிரே பௌர்ணமி நிலவே நேரில் வந்து குதித்தது போல பூமா நின்றாள். அதிர்ந்தே போய் விட்டான்.
கண்ணை கசக்கி கொண்டு பார்த்தான். எதுவும் காத்து கறுப்பா இருக்குமோ. சேய் இது சிவப்பு. மினிங்கிடும் சிவப்பு. அய்யோ. நாம் வீட்டுக்குள் படுக்கையில் பார்த்தோமே அந்த நிலவுதான் இப்போது மொட்டை மாடியில் நிற்கிறது.
“யார் நீ”. குரல்தேனிலும் இனிமையாக ஒலித்தது. ஆகா பாரதி சொன்ன தேனிலும் இனிய குரலாய் தமிழாய் ஒலிக்கிறாளே. தன் மீது மலர் கூடையை கவிழ்த்தது போல இருந்தது. சொக்கித்தான் போனான் வெள்ளத்துரை.
“யார் நீ”.
இவனால் பேச முடியவில்லை.
“களவாங்க வந்தியோ களவாணி”. பூமா அவன் சட்டையை பிடித்து உலுக்க வந்தாள்.
சத்தம் வரவில்லை. பேச நினைக்கிறான். ஆனால் அவன் தொண்டைக்குள் நின்று கொண்டது சத்தம்.
“யார் நீ. சொல்லு போலிசில பிடிச்சுகொடுத்திருவேன்”.
திரும்பவும் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
“என் வீட்டில திருட ஒண்ணுமில்லை. சாப்பிட்டு பல நாளு ஆச்சி. ஈரத்துணியை வயித்தில கட்டிக்கிட்டு மூனு பேரும் கிடக்கோம். எங்க கிட்ட எதை எதிர்பார்த்து வந்தவோய்”.
இந்த அழகி சாப்பிட வில்லையா? சோறு இல்லாமலா இருக்கா. அடப்பாவமே. “நீங்க மூனு பேரும் சாப்பிடலையா?”
“ஆமாம். திருட்டு பயலே. கேள்வி கேட்கீயே. என்ன சாப்பாடு கொண்டு வரப்போறீயாக்கும். திருட வந்தவன் நீ. உனக்கெங்கே எங்கள் அவஸ்தை புரியும்”.
அவளின் பிராமண பாசை இவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
திக்கி திணறி பேசினான்.
“நான் சாப்பாடு கொண்டு தந்தா சாப்பிடுவீயளா?”
“நன்னா சாப்பிடுவோம். பசி கொடுமை உனக்கு வந்தா தெரியும்”.
அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
இப்போ வாறேன்.
மறுநிமிடம். மாடியில் இருந்து டைவ் அடித்து தெருவில் குதித்தான். தாமிரபரணி ஆற்றங்கரையை தாண்டி ஓடினான். வீட்டுக்குபோனான். செல்லலையா ஒவ்வொரு வீட்டிலும் இரவு சாப்பாட்டுக்காக வாங்கி மொத்த சோற்றையும் ஒரு பானையில் வைத்து தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார்.
தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து சும்மாடு கட்டினான். அந்த மண் பானையை உலை மூடிவைத்து முடினான். அதன் பிறகு அதை தூக்கி தலையில் வைத்தான். அருகில் கிடந்த சாக்கு பையில் வத்தல் மிளகாய், உப்பை அள்ளிப் போட்டுக்கொண்டான். அக்ரகாரத்தினை நோக்கி நடையை கட்டினான். அடுத்த 10 வது நிமிடம் அந்த வீட்டுக்கு முன்னாள் வந்து நின்றான். மாடியின் நின்று பார்த்துக் கொண்டிருந்த பூமா கீழே ஓடி வந்தாள்.
இவன் என்னடா நாம் சொன்னவுடன் ஏதோ பானையுடன் ஒடி வருகிறான். ஒரு வேளை சோத்து பானையாக இருக்குமோ. ஒரு மாதிரி வருகிறான். நாம கதவை திறப்போம் இல்லாட்டி திரும்பவும் அடுப்பாங்கரை வழியாக உள்ளே வந்தாலும் வந்து விடுவான்.
கீழே ஒடி வந்தாள். கதவை திறந்தாள். அவளை எதிர்பார்க் காமலேயே கஞ்சி பானையோடு உள்ளே வந்தான் வெள்ளத்துரை.
மின்சார லைட்டை போட்டாள். அது அனைந்த லைட் போல எரிந்தது. நடு வீட்டில் அந்த பானையை வைத்தான். தனது தோளில் வைத்திருந்த பையில் இருந்து மிளகாய், வத்தல், உப்பை எடுத்து வைத்தான். அதை அருகில் பரத்தி வைத்தான்.
“ம். சாப்பிடுங்க”. என்றான்.
இதற்குள் சத்தம் கேட்டு எழுந்தார்கள் அய்யரும், அய்யர் மனைவியும்.
“அது யாருடி நடுராத்திரியில”.
“தெரியல்லண்ணா”
பூமா சொன்னாள். “யாரோ கோயில் பூசாரி போல . கஞ்சி கொண்டு வந்திருக்கார். உங்களை சாப்பிட கூப்பிடுதார்”.
“யாருடி அவரு யாரு. நம்ம ஆளா-?”.
“ஆமாம். நடுராத்திரியல எந்தபிராமணவாள் வந்து அன்னம் தரப்போறார். பகவானே நடுராத்திரியில் கொடுத்து விட்டுருக்கார். யாரோ எவரோ எந்திரிங்கண்ணா. முதலுல பசியாருவோம்”.
தள்ளாடி நடந்த கணவனை அழைத்து வந்தாள். மூன்று பேரும் தங்களது கையை விட்டு கஞ்சிப்பானையில் இருந்து கஞ்சியை எடுத்து ஒவ்வொருவருக்கு ஒருவர் ஊட்டினர்.
மூவர் கண்ணிலும் கண்ணீர் மல்கியது.
பூமா. தனது தந்தைக்கும், தாயிக்கும் ஊட்டினாள். “நீ. சாப்பிடு” என தாய் மகளுக்கு ஊட்டினாள். மூன்று பேருக்கும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
முழு சைவம் அய்யர். பாவம் பனையேறி வீட்டில் எத்தனை பேர் இன்று கருவாடு மீன் சேர்த்து இருந்தாங்களோ. மொத்த வீட்டு சாப்பாடும் இதில் இருந்தது.
“சாமியோ. கண்ணை துடைச்சிக்காங்க. நல்லா சாப்பிடுங்க. உங்களுக்கு நான் தினமும் கஞ்சி கொண்டு வாறேன்”.
“நீ யாரு அம்பி”.
“யார இருந்தா என்னண்ணா. சாப்பிடுங்கோ. அப்புறம் பேசுவோம்”.
வெள்ளத்துரையும் அப்படியே நினைத்தான். “நல்லா சாப்பிடுங்க சாமி. மாமி நீங்களும் சாப்பிடுங்க. எம்மா தாயி நீங்களும் சாப்பிடுங்க. வயசு பிள்ளைய பட்டினியா கிடக்க கூடாது . அப்படியே கிடந்தா எங்க பத்திரகாளி தாயி பட்டினியா கிடந்ததா அர்த்தம்”.
“பத்ரகாளியா? நீ யாருடே”. திடுக்கிட்டார் அய்யர்.
வாயை பொத்திக்கொண்டு இருந்து இருக்கலாமோ. ஏற்கனவே அப்பா சொல்லுவாரு. நாம அவங்களுக்கு பாத்தாளே தீட்டு. இங்க வந்து கஞ்சியை கொடுத்துகிட்டு இருக்கோம். அதுவும் ஊர் முழுவதும் வீடு வீடா வண்ணான் எடுத்த கஞ்சி. தெரிஞ்சா அய்யரு பொறிச்சி புடுவாரு பொறிச்சி.
“இல்லை சாமி. சும்மா சொன்னேன்”. மலுப்பினான் வெள்ளத்துரை.
“பராவாயில்லை என்ன வேணுமுன்னாலும் சொல்லு இன்¬னைக்கு நீ சாப்பாடு தரலேண்ணா. இரண்டு நாளுல எங்க மூனு பேர் உயிரும் போயிருக்கும்”.
“சரி சாமி. நல்லா சாப்பிடுங்க”.
மூன்று பேரும் சாப்பிட்ட திருப்தியோடு. பானையை பார்த்தான். மொத்த பானையும் காலியாகி இருந்தது.
செம பட்டினியா கிடந்து இருப்பாவ போல. மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
“சரி. பானையை கொண்டுட்டு போறேன். முடிஞ்சா நாளைக்கு ராத்திரி கஞ்சிகொண்டுட்டு வாறேன்”.
பூமா அவனை பார்த்தாள். யார் இந்த கருப்பழகன். வண்ணத்தில் கறுப்பாக இருந்தாலும் எண்ணத்தில் வெள்ளையாக இருக்கிறானே. தினவெடுத்த தோளுக்குசொந்த காரன். அவன் முகத்தில் அரும்பு போல விட்ட மீசை மிக கவர்ச்சியாக இருந்தது. சட்டையை வித்தியாசமாக போட்டு இருந்தான். கழுத்தில் குற்றால துண்டு. கையில் தாயத்து கட்டியிருந்தான். இடுப்பில் கட்டியிருக்கும் வேஷ்டியை வித்தியாசமாக தூக்கி கட்டியிருந்தான். அவன் உள்ளே போட்டிருந்த காக்கி டவுசர் வெளியே தெரிந்தது. முழுவதும் நனைந்திருந்தது. இவன் ஆத்துக்கு மேக்கரை காரன் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் இவன் என்ன இனம். எதுக்காக வந்தான். என்னை பார்த்தவுடன் சென்றவன். சாப்பாடு கொண்டு வந்திருக்கிறான். இவன் யாரு. எதற்காக வந்தான். அவள் எண்ண ஒட்டம் பலவாறாக இருந்தது.
வாசல் வரை வந்து அவனை அனுப்பி விட்டு கதவை சாத்தினாள். அதன் பின் உள்ளே வந்தாள். நீண்ட நாளுக்கு பிறகு பசியில்லாமல் நிம்மதியாக தூங்கினார்கள்.
****
மறு நாள் காலை விடிந்தது.
சூரியன் கிழக்கே மலையில் இருந்து குதித்து தன் முகத்தினை தாமிரபரணியில் காட்டிக் கொண்டிருந்தான். அவன் கதிர் வீச்சு முற்றத்தில் படுத்து கிடந்த வெள்ளத்துரை முகத்திலும் விழுந்தது.
“யய்யா. வெள்ளத்துரை யய்யா எந்திரிய்யா”.
தூக்கம் கழிந்து எழுந்தான். “என்ன சுப்பையா அண்ணே”. கண்ணை கசக்கி கொண்டான்.
“யய்யா. சோத்து பானையில சோத்தை காணும்”.
அதிர்ந்தான்.
“எனக்கு என்ன தெரியும். வாசலை தொறந்து வச்சி தூங்கியிருப்பிய. நாய் வந்து சாப்பிட்டு போயிருக்கும்”.
“ஒரு பானை சோத்தையுமாய்யா சாப்பிடும்”. அப்பாவியாக கேட்டான் செல்லையா.
“இருக்கும். இருக்கும்”.
“என்னய்யா சொல்லுதிய. நீங்க பாத்தியளா?”
“நான் எங்க பாத்தேன். பொறவு பானை சோத்தை பூதமா கொண்டு போவும்”.
எரிச்சலோடு பேசியவன். அருகில் உள்ள மரத்தில் வேப்பங்குச்சியை மொடித்து பல்லை விளக்கிய படி, ஆத்துக்கு குளிக்க சென்றான்.
“யம்மோ. சோத்தை காணோம். குழம்பு மட்டும் இருக்கு. எதுக்கும் ஒரு காப்பிடி அரிசியை வச்சி சோறு பொங்குங்கம்மோ” என்றார் செல்லையா.
வெள்ளத்துரையின் தயார் லெட்சுமி, சோறு பொங்க ஆரம்பித்தாள்.
“என்ன யப்பா. ஒரு பானை சோறுமா காணாம போச்சி”.
“அதான் எனக்கும் தெரியலை. யம்மோ. இது நாலு காலு போட்ட நாயி மாரி தெரியலை. ஏதோ இரண்டு காலு மனுசன் வேலை மாரிதெரியுது. எதுக்கும் தம்பி மேலே ஒரு கண்ணை வையுங்க”. என்றார் செல்லையா.
ஆற்றுக்கு சென்ற வெள்ளத்துரைக்கு, புல்லில், ஆற்றில் குதித்து குளிக்கும் வீரபாண்டிய கசத்தில் எல்லாம் பூமா நின்று கொண்டு சிரித்தாள்.
“என்ன கள்ளப்பயலே” என்றாள்.
“நானா கள்ளப்பய. நான் தட்டிக்கேட்கத்தான் வந்தேன். என் மனசை கொள்ளையடிச்சவ நீ. அப்படின்னா நீ தான் கள்ளச்சி. அடியே கள்ளி”. என தண்ணீரில் முகம் காட்டிய பூமாவை கிள்ளினான். பாவம் ஒடும் நீரில் சிறு அலசல் ஏற்பட்டு அவள் மறைந்தாள்.
இது தேவையா? பள்ளை விலக்கியவன். வாயை கொப்பளிக்காமல் வீடு வந்து சேர்ந்துவிட்டான்.
வாயில் வடிந்த கோழையை பார்த்து செல்லையா சிரித்தார். “யய்யா, ஆத்துல குளிச்சா கோழை வருமுன்னு இப்பத்தான் தெரியுது அய்யா. கோழை வடிக்கவா ஆத்துக்கு போனீய” என்றவர் மண் குவளையை கையில் கொடுத்து “மூஞ்சியை கழுவுய்யா” என்றார்.
அசடு வழிந்த வெள்ளத்துரை சிரித்துக்கொண்டே முகத்தினை கழுவினான்.
செல்லையாவின் மனம் சிந்தித்தது.
“தம்பி தப்பு பண்ணுது. ஏதோ பெரிய தப்பு பண்ணுது. இன்னைக்கு ராத்திரி தம்பி என்ன பண்ணுதுன்னு கண்டுபிடிக்கணும்”.
யோசனையோடு எழுந்தார்.
பொழுது அடைந்தது.
நிலவு மேகக்கூட்டம் வழியாக வந்து நின்றது.
அடுத்து தனது வெளிசத்தினை இந்த பூமியில் விரித்தது.
வெள்ளத்துரைக்கு இருப்பு கொள்ளவில்லை.
அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்தான்.
சுப்பையா ஊர் சாப்பாடு எடுக்கப்போனார். சட்டி நிறைய குழம்பு வாங்கி கொண்டார். மற்றொரு பெரிய பானையில் ஊர் சோற்றை வாங்கினார்.
வீட்டில் வந்து மூலரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
அதன் பின் சோற்றுப்பானையை மூடி வைத்து விட்டு சுப்பையா படுக்கப்போனார். பெண்கள் இருவரும் படுத்து தூங்கி விட்டனர்.
வெளி கட்டிலில் படுத்துக்கிடந்த வெள்ளத்துரை எல்லோரும் தூங்கட்டும் என காத்து கிடந்தான்.
அந்த குறிப்பிட்ட நேரம் வந்தது. ஊர் அடங்கி விட்டது. எங்கோ தவளை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நாய் குறைத்துக்கொண்டிருந்தது.
வெள்ளத்துரை எழுந்தான். தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து சும்மாடு கட்டினான். கஞ்சி பானையை தூக்கினான். தலையில் ஒய்யாரமாக வைத்துக்கொண்டான். தோள் பையில் வத்தல் மிளகாய் உப்பு போன்றவற்றை பொட்டலம் கட்டி வைத்துக்கொண்டான். ஆற்று வழியாக கீழக்கரைக்கு நடையை கட்டினான்.
இந்த தருணத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த செல்லையா பூனைப்போலேவே அவன் பின்னாலேயே நடந்தார்.
வெள்ளத்துரை எங்கே போகிறான். கஞ்சி பானையை யாருக்கு கொண்டு போகிறார். புரியாத புதிராக இருக்கிறானே வெள்ளத்துரை.
ஆற்றைக்கடந்து ஒற்றையடி பாதை வழியாக நடந்து, அதன் பின்பு வயல்வெளிகளை கடந்து அந்த அக்ரகாரம் வந்தான்.
சிவராமன் அய்யர் வீட்டு முன்னால் போய் நின்றான். அதன் பிறகு கதவை தட்டினான். பூமா கதவை திறந்தாள். கஞ்சி கலையத்தோடு உள்ளே சென்றான்.
நடுவீட்டில் கஞ்சி கலையத்தினை இறக்கி வைத்தான்.
பின்னாலே வந்த சுப்பையா வாசலில் நின்று கொண்டார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“புள்ளிக்காரன் சிவராமன் அய்யரை பழிவாங்க போறேன்னு சொன்னான். இங்க கஞ்சி கலையம் சுமந்துகிட்டு இருக்கான் என்ன நடக்கு இங்க” மனதுக்குள் புலம்பிக்கொண்டார்.
“இன்னைக்கு ஏன் சாப்பாடு கொண்டு வந்த உன்னை யாரு கேட்டா” பூமா கோபமாக கேட்டாள்.
“இல்லை தினமும் அய்யர்வால் பட்டினியா கிடக்காவ போல. அதான் இன்னைக்கும் கொண்டு வந்தேன்”.
“யாருடி அங்கே. யாரு கிட்ட பேசறேடி” சிவராமன் அய்யர் சத்தமாக கேட்டார். மனுசனுக்கு கண் தெரியா விட்டாலும் . நன்றாக காதுகேட்கிறது.
“ஒண்ணுமில்லை. நேத்து கஞ்சி கொண்டு வந்தானே ஒருத்தன். அவன் இன்னைக்கும் வந்திருக்காண்ணா. சாப்பிட சொல்லுதான்”.
“ம். கூம். அவன் யாரு. என்ன ஏதுன்னு விசாரிச்சிங்களா?”
“தெரியலைண்ணா”. அய்யரின் மனைவி சொன்னாள்.
பூமா வெள்ளத்துரையை கோபமாக பார்த்தாள். “நீ யாருன்னுனே தெரியலை. நேத்து பசி வாங்கி சாப்பிட்டுட்டோம். தினமும் கொண்டு வந்தா சரிப்படாது . நீ போ. அய்யருக்கு கோபம் வந்தா திட்டிப்புடுவாரு”. என்றாள்.
அதற்குள் அய்யர் தட்டுத்தடுமாறி வந்து விட்டார்.
“சரி எந்த ஊருடே. நீ. யாரு”.
“மேக்கரைத்தான் என் ஊரு”.
“நீ இங்க எதுக்கு சோறெல்லாம் கொண்டு வாரே”.
இனி அவனால் சும்மா இருக்க முடியவில்லை.
“இங்க பாருங்க சாமி. நான் யாரு என்னன்னு சொல்லி புடுதேன். இங்க பாருங்க சாமி. ஒரு 50 வருசம் முன்னால ராஜதுரைன்னு ஒரு நல்ல மனுசன் மேலே கொலை கேஸ் போட்டு துரத்தி விட்டியளே ஞாயபகம் இருக்கா. அவிய மவன் தான் நான். என் பேரு வெள்ளத்துரை. நீர் செஞ்ச காரியத்தால எங்க அப்பா நல்லா அனுபச்சிட்டாரு. ஊரு ஊரா ஓடுனாரு. கடைசியல ரங்கூன் போனாரு. உலக போருல குண்டு போட்டாவுலா அதுல சம்பாதித்த எல்லாத்தையும் இழந்துட்டு ஊருக்கு வந்தோம். சாமி நீர் போட்ட பொய் கேஸ்ல அவரை போலிஸ் பிடிக்க வந்தாவ. அதுக்குள்ள அவிய உயிர் போயிட்டு”.
அய்யர் அமைதியாக இருந்தார். பழைய காலம் அப்படியே அவர் கண் முன்னால் வந்து நின்றது. ராஜதுரையை விரட்ட தான் போட்ட திட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்போது இளரத்தம். தப்பு என்று தெரிந்தும் தப்பு செய்த காலம். இப்போது இரத்த ஓட்டம் எல்லாம் குறைந்து விட்டது.
“உம்ம பழி வாங்கணுமுன்னுதான் சாமி வந்தேன். ஆனா நேத்து ராத்திரி நீர் பட்டினியா கிடக்கதை கேள்வி பட்டு. சாப்பாடு கொண்டு வந்தேன்”.
“ஏய். நீ. இப்போ வண்ணான் வீட்டில தான இருக்க. அப்போ அவன் வீட்டில இருந்து ஊர் சாப்பாடையா நேத்து கொண்டு வந்து தந்த”.
“பொறவு என்கிட்ட இருக்க சாப்பாட்டைத்தானே தரமுடியும்”.
அமைதியாக இருந்தார் அய்யர்.
“ம். அவனுவளை ஒரு காலத்தில ஓட ஓட விரட்டினேன். இன்னைக்கு என் வயித்து பசி அவனுவை போட்ட சோறு. பாத்தியாடி. கலி முத்தி போச்சி. அந்தந்த காலத்திலே பகவான் தண்டனை தர்றான்”.
விரக்தியாக சிரித்தார்.
“ஆனாலும் என் வயலுல உழைச்சவனுவ வீடடுல பிச்சை எடுத்த சாப்பாட்டை பகவான் சாப்பிட வச்சிட்டாரே”.
மனம் நொந்து போய் விட்டார்.
“ஏடி. பூமா. போதுமுடி இந்த வாழ்க்கை போதுமுடி. எந்த பிறவிகளுக்கு நான் தீங்கு விளைவிச்சேனோ. அந்த பிறவிகள் எனக்கு அன்னமிட்டுருக்காவோ. எவனை ஊரை விட்டு விரட்டினேனோ. அவன் வாரிசு இன்னைக்கு பட்டினியா இருந்த எனக்கு போஜானம் கொடுத்துருக்கான். பகவான் எனக்கு உணர்த்திட்டாண்டி. உணர்த்திட்டான்”.
கதறினார் சிவராமன் அய்யர்.
“அழாதீங்கண்ணா. அழாதீங்க”.
“இப்போ ரெண்டு கண்ணும் இழந்த கபோதி நான். என் பெண்ணை நன்ன இடத்தில மனம் முடித்து கொடுக்க முடியாதவனாய் போயிட்டேன்டி”.
வெளியே நின்ற செல்லையாவுக்கும் வருத்தமாக இருந்தது. சேய். எவ்வளவு ஒய்யாரமாய் இருந்தவர். எவ்வளவு தோரணமாய் நடப்பார். மிடுக்காய் இருப்பார். இன்று இப்படி கூனி குறுகி போய் நிற்கிறார்.
அவருக்கே மிகவும் பாவம் படும் மாதிரி இருந்தது.
உன் அப்பனுக்கு நான் செஞ்ச துரோகம் நான் தினமும் நடை பிணமா இருக்கிறேன்வோய்.
அய்யர் புலம்பிக்கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் மனதில் ஊர் சோறை தின்று விட்டோமே என்ற வெறுமை இருந்தது. அந்த உணவை சாப்பிட்ட நாம் இனிமேலும் உயிரோடு இருக்க வேண்டுமா?
அவர் மனது எடுத்த முடிவு பூமாவை அனாதை ஆக்கும் நிலைக்கு கொண்டு சென்றது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)