தூத்துக்குடியில் மருத்துவம் படிக்காமல் பிரசவம், சிகிச்சை அளித்ததாக 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செ.கற்பகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் குடிமை மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகநயினார், சுகாதார அலுவலர்கள் காமாட்சி, அருணாசலம், பெவின், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷகிலா ராணி ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை பகுதியில் கமோண்டராக பணியாற்றிய கந்தப்பன் (78) என்பவர் மருத்துவ படிப்பு எதுவும் படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவர் குலையன்கரிசலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றபின் கடந்த 20 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து புதுக்கோட்டை சுற்றி வட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று தட்டப்பாறை பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரா (54) என்பவர் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவர் எந்தவித மருத்துவ படிப்பும் படிக்காமல் சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் தூத்துக்குடியில் பல தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்ததாகவும் அங்கே ஊசி போடுவது பிரசவம் பார்ப்பது போன்ற வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


