விளாத்திகுளம் அருகே உயர் மின்னழுத்தத்தால் பல்வேறு வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கந்தசாமிபுரம் மற்றும் சேர்வைகாரன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலும் நேற்று இரவு ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக பல்வேறு வீடுகளில் உள்ள LED டிவிகள், குளிர்சாதன பொருட்கள், மின்விசிறி, மின்விளக்குகள், க்ரைண்டர்,குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
கந்தசாமிபுரம் கிராமத்தை பொருத்தவரை அப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து வரும் நிலையில், மின்னழுத்தம் காரணமாக பழுதான மின்சாதன பொருட்களை சரி செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.
மின் கட்டண தொகையை ஒரு நாள் தாமதமாக செலுத்தினாலும், அல்லது மின் கட்டணத் தொகையை செலுத்தாமல் இருந்தால் பீஸ் கேரியரை அதிரடியாக பிடுங்கி அபராத தொகை விதிக்கும் மின்வாரியத் துறையினர், மின்சாரத்துறையின் அலட்சியம் காரணமாக பழுதான மின்சாரப் பொருட்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


