தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.18 முதல் 27 வரை ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு 18.12.2023 முதல் 27.12.2023 வரை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்படவுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு குறித்தும், பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சியளித்தும், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பது தொடர்பான கூட்டம் நடத்தியும், ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.


