ரெஜினா கசாண்ட்ராஇவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற தெலுங்கு படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார்.
ரெஜினா 13 டிசம்பர் 1990இல் சென்னையில் பிறந்தார். இவரின் தாய் மொழி தமிழ் ஆகும். சென்னையிலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 2013ம் ஆண்டு விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் இணையாக நடித்தார். அந்தப்படம் மதிப்புரைஞர்களாலும் பார்வையாளர்களாலும் பாராட்டப் பெற்றது. அதே ஆண்டு அவர் நடித்து வெளியான நிர்ணயம் என்ற படம் கலவையான மதிப்புரையைப் பெற்றது.
2010ம் ஆண்டு இயக்குனர் கே .எம் .சைதன்யா இயக்கத்தில் வெளியான சூர்யகாந்தி என்ற கன்னடத் திரைப்படத்தில் நடிகர் சேதன் குமாரின் இணையாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான போது இரண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை வென்றார்.


