லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் கிடைத்தது.


