குழந்தைகள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீண்டும் குழந்தைகளுடன் பணியாற்றும் வாய்ப்பு வழங்கக்கூடாது கனிமொழி பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையில் சேதமடைந்திருக்கும் பாலத்தினை பார்வையிட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.
அவர் பாலத்தினை ஆய்வு செய்து விரைவில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் தவறு செய்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அதனை மூடி மறைக்கிறது. மாணவர்களை மிரட்டுவதும் சமாதானப்படுத்துவது மட்டுமே நிர்வாகத்தின் போக்காக உள்ளது. தவறு செய்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் நிர்வாகம் எடுப்பதில்லை. இந்த கோவையில் நடந்த சம்பவமும் அது போல் தான். தவறு செய்தவர் மீது புகார் அளித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தால் இந்த மாணவி உயிர் போயிருக்காது-. இதுபோல் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் எழுப்பி இருக்கின்ற கேள்வியான, சிறுவர்கள் மீதான வன்முறைகளை செய்பவர்களுக்கு தனியாக ரெக்கார்டு உருவாக்கி ஒருமுறை புகார் வந்தால் அவர்ளை மீண்டும் குழந்தைகளோடு பணியாற்றக்கூடிய எந்தவிதமான வாய்ப்பும் வழங்கக் கூடாது. சட்டம் கடுமையாக்க வேண்டும் என்று கூறுகிறார்களே தவிர அதனை தொடர்வது இல்லை. பலருக்கு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பதற்கு கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே சென்றாலும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படுதில்லை. மேலும் நீதிமன்றங்களில் வழக்கும் முடிவதில்லை. பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள். அவர்களின் மனஉழைச்சலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்று தெரிவித்தார்.


